சுமார் 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகளை பைடென் அரசு திருப்பி அழைத்த தினம் முதல் தலிபான் அங்கு வேகமாக நகரங்களை கைப்பற்றி வருகிறது. தற்போது குறைந்தது 18 மாநில தலைநகரங்கள் தலிபான் கைக்கு மாறி உள்ளன.
தற்போது தலிபான் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலையும் (Kabul) நெருங்கி உள்ளது. இந்நிலையில் அங்குள்ள அமெரிக்க தூதுவரகத்து பணியாளரை மீட்க அமெரிக்கா 3,000 படையினரை அனுப்புகிறது. அதில் சிலர் ஏற்கனவே காபூல் சென்று உள்ளனர். ஏனையோர் இந்த கிழமை முடியுமுன் அங்கு செல்வர்.
அத்துடன் அமெரிக்க தூதரக ஊழியர்களை அவர்கள் கைவசம் உள்ள ஆவணங்களை அழிக்கும்படியும் அமெரிக்கா கூறியுள்ளது. இவை தலிபான் கைக்கு செல்வதை தடுப்பதே நோக்கம்.
அமெரிக்கா ஆப்கானிஸ்தான் படைகளுக்கு வழங்கிய தரமான ஆயுத தளபாடங்களையும் தலிபான் கைப்பற்றி வருகிறது.
பிரித்தானியாவும் தனது மக்களை மீட்க Operation Pitting என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து உள்ளது. சுவிற்சலாந்து, டென்மார்க், நோர்வே, பின்லாந்து ஆகிய நாடுகளும் தமது தூதரக ஊழியர்களை மீட்க உள்ளன.
சில ஆப்கானிஸ்தான் அரச படையினர் பாதுகாப்பு தேடி ஈரானுள் நுழைந்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.