தமிழ்Mirror என்ற இலங்கையை தளமாக கொண்ட தமிழ் பத்திரிகை “சூலத்தை பிடுங்கி புத்தரை நட்டு வேட்கை தணிக்கும் அகழ்வு” என்ற ஒரு ஆசிரியர் தலையங்கத்தை இன்று (2021/01/21) பதித்துள்ளது. இந்த ஆசிரியர் தலையங்கம் குருந்தூர் சம்பவத்தை அலசி ஆராய்ந்து குருந்தூரில் புத்தரை நிலைநாட்டியோரையும் துணிவுடன் கண்டிக்கிறது.
” தமிழர்களுக்கே சொந்தமான புராதன ஆதி சிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள முமுழமுனை, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக் கல்லு பகுதிகளில் இரண்டு விகாரைகள் இருந்தமைக்கான சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்தே மிகக் கச்சிதமாய் நடப்பட்டுள்ளது. ” என்றெல்லாம் விசனித்து உள்ளது அந்த ஆசிரியர் தலையங்கம்.
தமிழ்Mirror பத்திரிகையை மட்டும் தவறாது படிக்கும் தமிழர் இப்பத்திரிகை பத்திரிகை தர்மம் நிறைந்த ஒன்றாக காணக்கூடும், பெருமைப்படவும் கூடும். ஆனால் ஆழமாக பார்த்தல் ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற உண்மையைத்தான் மீண்டும் ஒருமுறை அறிய நேரிடும்.
தமிழ்Mirror பத்திரிகைக்கு DailyMirror.lk என்ற ஒரு ஆங்கில சகோதர பத்திரிகையும் உண்டு. இலங்கை தொடர்பான பிரதான செய்திகளை இந்த இரண்டு பத்திரிகைகளும் ஒளிவு மறைவு இன்றியே இலங்கையர் அனைவருக்கும் வழங்கும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் தமிழ்Mirror தமிழருக்கு மட்டும் உருவேற்ற பதியும் செய்திகளையும், ஆசிரியர் தலையங்களையும் ஆங்கிலத்திலும் பதிப்பதை உங்களால் காண முடியுமா என்று தேடி பாருங்கள். தமிழருக்கு தெரிந்த செய்திகளை தமிழருக்கு மட்டுமே தெரிவித்து, அதற்கு ஆசிரியர் தலையங்கமும் புனைந்து, ஆனால் ஆங்கிலத்தில் மறைப்பது தமிழரை உரு ஏற்ற மட்டுமே பயன்படும். தமிழில் பிரசுரித்த ஆசிரியர் தலையங்கத்தை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் பதித்தால் மட்டுமே தவறு செய்தவர்கள் தவறுகளை விளங்கிக்கொள்வர்.
அண்மையில் (2021/01/09) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தூபி ஒன்று உடைக்கப்பட்ட செய்தியும் உடனுக்குடன் தமிழ்Mirror பதிப்பில் வெளிவந்திருந்தது. ஆனால் அவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ந்ததற்கான அறிகுறி எதுவும் DailyMirror.lk பதிப்பில் சமகாலத்தில் இடம்பெறவில்லை. Ada Derana போன்ற சிங்கள பதிப்புகள் எல்லாம் தூபி உடைப்பை பதித்த பின்னரும் DailyMirror பதிக்கவில்லை. இவை எல்லாம் தற்செயலாக நிகழ்ந்த சம்பவங்களா அல்லது தமிழ்Mirror/DailyMirror நிறுவனத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளா என்பதை அறிய நீங்களே சில காலம் தமிழ்Mirror மற்றும் DailyMirror இரண்டையும் படித்து, ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம்.
மேற்படி இரண்டு பதிப்புகளில் வரும் செய்திகள், கட்டுரைகள், cartoons போன்ற எல்லா ஆக்கங்களிலும் மேற்படி உண்மையை அறியலாம்.
இணைக்கப்பட்ட படத்தில் ஜனவரி 9ம் திகதி எடுக்கப்பட்ட DailyMirror பதிப்பு இடது பக்கமும், தமிழ்Mirror பதிப்பு வலது பக்கமும் உள்ளன. அதில் தமிழ்Mirror சுடச்சுட தூபி உடைப்பு செய்தியை தருவதையும், அதேநேரம் DailyMirror மௌனமாக இருப்பதையும் காணலாம். குருந்தூர் விவகாரத்திலும் அவ்வாறே, முன்பக்க செய்திகளும் இல்லை, ஆசிரியர் தலையங்கமும் இல்லை. இரண்டு ஊரில் இரண்டு நாடகம்.