தட்சர் காலத்து பெறுமதிக்கு வீழ்ந்த பிரித்தானிய பவுண்ட்

தட்சர் காலத்து பெறுமதிக்கு வீழ்ந்த பிரித்தானிய பவுண்ட்

பிரித்தானியாவின் நாணயமான பவுண்ட் ஒன்றின் பெறுமதி  அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் 37 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெறுமதிக்கு வீழ்ந்து உள்ளது. தற்போது பவுண்ட் ஒன்றுக்கு $1.14 மட்டுமே கிடைக்கிறது.

அமெரிக்க டாலருக்கான இந்த அளவு குறைந்த நாணய மாற்று வீதத்தை பிரித்தானியா இதற்கு முன் மக்கிரட் தட்சர் காலத்தில் கொண்டிருந்தது.

1972ம் ஆண்டில் பவுண்ட் ஒன்றுக்கு $2.65 கிடைத்து இருந்தது. 1970ம் ஆண்டுக்கு முன் பவுண்ட்-டாலர் நாணய மாற்று பெறுமதி பிணைக்கப்பட்டு இருந்தது.

பிரித்தானிய பவுண்ட் வீழ்ச்சி அடைய பல காரணங்கள் உள்ளன. அமெரிக்காவுடன் கூட்டு அமைக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது, யூக்ரேனில் தொடரும் யுத்தமும் அதனால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு, பிரித்தானியாவில் பொருளாதார முடக்கம் இடம்பெறலாம் என்ற பயம் ஆகியன பிரதான காரணங்கள்.

பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் (Liz Truss) பல உறுதி மொழிகளை வழங்கினாலும் வணிக உலகம் அவற்றை முற்றாக நம்பவில்லை. எரிபொருள் விலையை கட்டுப்படுத்த மட்டும் புதிய பிரதமர் $172 பில்லியன் செலவழிக்க உறுதி கூறி உள்ளார். அத்துடன் அவர் அதிக அளவில் வரியை குறைக்கவும் உறுதி கூறியுள்ளார்.

வரியையும் குறைத்து செலவுகளையும் அதிகரிக்க எங்கிருந்து பணம் பெறப்படும் என்று லிஸ் டிரஸ் கூறவில்லை.