வெளிநாடுகள் சீன நிறுவனங்களையோ அல்லது சீன நபர்களையோ பொருளாதார தடைகள் மூலம் தண்டிப்பதை தண்டிக்க சீனா புதிய சட்டம் ஒன்றை இன்று வியாழன் நடைமுறை செய்துள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளன மேற்கு நாடுகள்.
பொதுவாக அமெரிக்கா போன்ற மேற்குநாடுகளே இவ்வகை சட்டங்களை உருவாக்கி பிறநாட்டு நிறுவனங்களை தண்டிக்க முனையும். உதாரணமாக தாய்வானை சீனா தாக்கினால் அமெரிக்கா தாய்வானின் உதவிக்கு செல்ல வேண்டும் என்று அமெரிக்காவில் சட்டம் ஒன்று உள்ளது.
ஒரு நாட்டுக்கு அப்பால் அந்த நாட்டு சட்டம் எவ்வாறு நடைமுறைப்படும் என்பது கேள்வியாக இருந்தாலும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் அவ்வாறே அதிகாரம் செலுத்தி வந்தன. உதாரணமாக ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் நடைமுறை செய்யமுன் ஈரான் பல Boeing விமானங்களை கொள்வனவு செய்ய பணம் செலுத்தி இருந்தது. ஆனால் பின் வந்த ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக Boeing விமானங்களை ஈரானுக்கு வழங்கவில்லை. அது மட்டுமன்றி செலுத்திய பணத்தையும் திருப்பி ஈரானுக்கு செலுத்தவில்லை.
சீனாவின் புதிய தடை எதிர்ப்பு சட்டம் வெளிநாடுகளின் தடைக்கு உடந்தையாக செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய வழிவகுக்கும். அந்த நிறுவங்களின் சொத்துக்களை சீனாவில் முடக்கவும் அதிகாரிகளை கைது செய்யவும் வழிவகுக்கும்.
உதாரணமாக சீனாவில் இயங்கும் அமெரிக்க வங்கி ஒன்று தீடீரென அமெரிக்க அரசின் தடைக்கு ஏற்ப செயற்பட்டால், அதனால் நட்டம் அடையும் சீனர் நீதிமன்ற உதவியுடன் அந்த வங்கியின் சொத்துக்களை முடக்கலாம். அந்த வங்கியின் உயர் அதிகாரிகள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம்.
Huawei நிறுவனத்தை ஆரம்பித்தவரின் மகளை கனடிய அரசு மூலம் இவ்வகை சட்டம் ஒன்று மூலமே அமெரிக்கா வன்கூவரில் கைது செய்திருந்தது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த காலத்தில் Huawei ஈரானுக்கு தொலைத்தொடர்பு உபகரணங்களை விற்பனை செய்தது என்பதே குற்றச்சாட்டு. இப்போ சீனாவும் அவ்வகை சட்டத்தை கொண்டுள்ளது.
ரம்ப் காலத்தில் இவ்வகை சட்டத்துக்கு சீனா விரும்பி இருந்தாலும், பைடென் அரசு முரண்பாடுகளை குறைக்கலாம் என்று சீனா எதிர்பார்த்தது. பைடெனும் ரம்ப் போல் செயற்பட, சீனா மேற்படி சட்டத்தை உருவாகியுள்ளது.