இன்று திங்கள் இந்தியாவின் தலைநகர் நியூ டெல்லியில் மீண்டும் சுவாசத்துக்கு ஆபத்தான வளி பரவியுள்ளது. அதனால் பாடசாலைகள் மூடப்பட்டு, வெளி நகரங்களில் இருந்து வரும் பார வாகனங்கள் தடுக்கப்பட்டு, கட்டுமான வேலைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
உலக சுகாதார அமைப்பின் (WHO – World Health Organization) ஆய்வின்படி 2.5 மைக்ரோ-மீட்டர் விட்டம் கொண்ட PM2.5 என்று அழைக்கப்படும் துகள்கள் நுரையீரல் வரை சென்று உடலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லன. WHO கணிப்பின்படி 1 மீட்டர் கனவளவு வளியில் 5 மைக்ரோ-கிராம் PM2.5 துகள்களுக்கு மேலாக இருந்தால் அந்த வளி சுவாசத்துக்கு உகந்ததல்ல.
ஆனால் தற்போது நியூ டெல்லியில் உள்ள வளி சுவாசத்துக்கு உகந்த வளியிலும் 130 மடங்கு ஆபத்தானது அல்லது hazardous அளவிலும் 5 மடங்குஆபத்தானது. அதனால் நியூ டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் டெல்லி வளியை “Beyond the AQI” என்று அளவிட்டுள்ளது.
தற்போது இங்கு கண்ணால் பார்க்கக்கூடிய தூரம் (visibility) 100 மீட்டர் ஆக மட்டுமே உள்ளது. அதனால் டெல்லி நகரில் விமான சேவையும் பெரும் இடரில் உள்ளது.
இங்கே வளி மாசு அடைதலுக்கு பிரதான காரணம் உழவர்கள் வைக்கோல் போன்ற தேவையற்ற தாவர பாகங்களை எரிப்பதே என்று கூறுகிறது இந்தியாவின் SAFAR அமைப்பு. இச்செயல் 40% மாசை தோற்றுவிக்கிறது. வானவேடிக்கைகளும் பெருமளவு மாசை தோற்றுவிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,334 இடங்களில் நெருப்பு தெரிந்ததாக செய்மதி படங்களை ஆதாரமாக கொண்டு SAFAR கூறியுள்ளது.