தற்போது மிகவும் மந்தமாக இருக்கும் ஜப்பானிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஜப்பானிய அரசு இன்று வெள்ளிக்கிழமை (2013:01:11) புதிய பொருளாதார ஊக்க முன்னெடுப்பு ஒன்றை அறிவித்துள்ளது. பிரதமர் Shizo Abe இனது அரசின் இந்த ஊட்ட முதலீடு சுமார் U$230 பில்லியன் (20 trillion Yen) பெறுமதியானது. இந்த முதலீடு முதலில் மூன்று துறைகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
சுமார் $43 பில்லியன் அனர்த்த நிவாரணம், அனர்த்தம் கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களில் செலவிடப்படும். இதில் பெருந்தெருக்கள் திருத்தம், சுரங்கப்பாதைகள் திருத்தம் போன்றவையும் அடங்கும். அடுத்ததாக சுமார் $19 பில்லியன் மக்களின் அன்றாட வாழ்வு சம்பந்தப்பட்ட விடயங்களிலும் சுமார் $16 பில்லியன் உள்ளூர் அரசுகளின் பொது வேலைத்திட்டங்களில் செலவிடப்படும். மூன்றாவதாக சுமார் $35 பில்லியன் பல்கலைக்கழக ஆய்வுகள், வர்த்தக நிறுவன ஆய்வுகள், புதிய வர்த்தகங்கள் ஆகியவற்றில் செலவிடப்படும்.
ஜப்பானிய அரசின் கணிப்புப்படி இந்த பொருளாதார ஊட்டம் ஜப்பானின் GDP ஐ 2% ஆல் அதிகரிக்கும். அத்துடன் 600,000 புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
கடந்த மாதம் தான் Abe தலைமையில் அவரின் Liberal Democratic கட்சி பெரும்பான்மை ஆட்சியை கைப்பற்றியிருந்தது.
2009 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு அறிவித்த பொருளாதார ஊட்ட பெறுமதி சுமார் $800 பில்லியன் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.