ஜப்பானில் கைவிடப்பட்டு உள்ள 3.5 மில்லியன் வீடுகள்

Japan

உலகின் சில இடங்களில் கேள்வி காரணமாக வீடுகளின் விலை அளவுக்கு மீறி ஏறி செல்ல, வேறு சில இடங்களில் வீடுகள் குடியிருக்க எவரும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. ஜப்பானில் மட்டும் சுமார் 3.5 மில்லியன் வீடுகள் குடியிருப்பாளர் இல்லாது கைவிடப்பட்டு உள்ளன. அது மட்டுமன்றி அங்கு சுமார் 4.1 மில்லியன் hectares நிலங்களும் உரிமையாளரை அடையாளம் காணமுடியாத நிலையிலும் உள்ளன.
.
குறைந்து வரும் சனப்பெருக்கமே இவ்வாறு வீடுகள் கைவிடப்பட முக்கிய காரணமாக விளங்குகிறது. சனப்பெருக்க வீழ்ச்சியால் வீடுகளின் தேவை குறைய, காணிகளின் விலைகளும் குறைந்து உள்ளன.
.
அரச பதிவு தரவுகளின்படி தனியார் வசமுள்ள மொத்த நிலங்களின் 20% நிலங்கள் 50 அல்லது அதற்கு கூடிய ஆண்டு காலத்துக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டவை. அதவாது இந்த நிலங்கள், அவற்றில் உள்ள வீடுகள் 50 வருடங்களுக்கு மேலாக வேறு கைகளுக்கு மாறவில்லை. இவற்றின் உரிமையாளர் சிலர் மரணித்தும் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
.
2011 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற சுனாமி பல வீடுகளை தரைமட்டம் ஆக்கியது. அவ்வாறு தரைமட்டம் ஆக்கப்பட்ட பல வீடுகள் மீண்டும் புதுப்பிக்கப்படாமையும் அவை ஏற்கனவே கைவிடப்பட்டு இருந்தமையை காட்டுகின்றது.
.
ஜப்பான் சட்டப்படி கட்டிடம் இல்லாத காணி ஒன்றுக்கான வரி, கட்டிடம் உள்ள காணிக்கான வரியின் 6 மடங்கு ஆக இருப்பதுவும் வீடுகள் கைவிடப்பட்டமைக்கு இன்னோர் காரணியாக கூறப்படுகிறது. கைவிடப்பட்ட வீடு ஒன்றை காணிக்குள் விடுவதால் வரி குறைகிறது.
.
உலகத்தில் சனத்தொகை வேகமாக குறைந்துவரும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. 1955 ஆம் ஆண்டில் ஜப்பானின் சனத்தொகை 1.46% ஆல் அதிகரித்து இருந்தது. ஆனால் 2015 ஆம் ஆண்டு முதல் சனத்தொகை குறைந்து வருகிறது. இந்த ஆண்டில் அங்கு சனத்தொகை 0.30% ஆல் குறைய உள்ளது.
.
1980 ஆம் ஆண்டுகளில் சனத்தொகை அதிகரிப்பு 2.3% ஆக இருந்த இந்தியாவில், தற்போது சனத்தொகை அதிகரிப்பு 1.0% ஆக மட்டுமே உள்ளது.
.
1966 ஆம் ஆண்டில் சனத்தொகை அதிகரிப்பு 2.4% ஆக இருந்த இலங்கையிலும் தற்போது சனத்தொகை அதிகரிப்பு சுமார் 1% ஆகவே உள்ளது.
.