சுயஸ் கால்வாய் (Suez Canal) ஊடு சென்ற மிக பெரியதோர் கொள்கலன் கப்பலின் அடிப்பாகம் மண்ணுள் புதைந்து உள்ளதால் அந்த கால்வாய் ஊடு செல்லும் கப்பல் போக்குவரத்துக்கு முற்றாக தடைப்பட்டு உள்ளது. இத்தடை ஐரோப்பாவில் சில பொருட்களுக்கு தற்காலிக தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம். அங்கு எரிபொருள் விலையும் அதிகரிக்கலாம்.
தாய்வானின் Evergreen நிறுவனத்துக்கு சொந்தமான Ever Given என்ற கப்பலே புதைந்து உள்ளது. இந்த கப்பல் 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் மொத்த சுமை சுமார் 219,076 தொன். இது சீனாவில் இருந்து நெதர்லாந்து செல்கையிலேயே புதைந்து உள்ளது. இந்த கப்பல் சுமார் 20,000 கொள்கலன்களை காவக்கூடியது.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 7:40 மணிக்கு புதைந்த இந்த கப்பல் கால்வாய்க்கு குறுக்கே உள்ளது. அதனால் இது ஏனைய கப்பல்கள் செல்வதையும் தடுக்கிறது. தற்போது சுமார் 30 கப்பல்கள் அங்கு முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 20 எண்ணெய் கப்பல்களும் அடங்கும். உலகின் சுமார் 12% வர்த்தக பொருட்கள், தினசரி சுமார் 50 கப்பல்களில், இந்த கால்வாய் ஊடு பயணிக்கின்றன.
புதைந்த இந்த கப்பலை இழுத்து மீட்க முடியாவிடின், அதில் உள்ள கொள்கலன்கள் இறக்கி, பாரத்தை குறைத்தே இழுக்க நேரிடும். அவ்வாறு செய்ய பல தினங்கள் தேவை.
சுயஸ் கால்வாய் சுமார் 193 km நீளமானது. இதன் சராசரி அகலம் 205 மீட்டர், ஆழம் 24 மீட்டர்.
மேற்படி இடரால் அங்குள்ள பழைய கால்வாய் மீண்டும் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.