சீனா 6ம் தலைமுறை யுத்த விமானம் ஒன்றை தயாரிக்கிறது என்று செய்திகள் முன்னர் கசிந்து இருந்தாலும் இன்று வியாழன் அந்த யுத்த விமானம் Chengdu பகுதில் பறந்ததை பலரும் கண்டுள்ளனர். அவர்கள் பிடித்த வீடியோக்கள் தற்போது இணையம் எங்கும் பரவி உள்ளன.
இந்த 6ம் தலைமுறை விமானத்துடன் ஒரு J-20 விமானமும் பறந்துள்ளது.
அமெரிக்க யுத்த விமானங்களை ஒத்த தரம் கொண்ட சீனாவின் 5ம் தலைமுறை யுத்த விமானங்களான J-20, J-35 ஆகிய இரண்டும் ஏற்கனவே சேவையில் இருந்தாலும் சீனா இன்னோர் பெயர் குறிப்பிடப்படாத யுத்த விமானத்தை தயாரிக்க முயல்வது முன்னர் அறிந்ததே. இந்த 6ம் தலைமுறை விமானம் இன்று பறந்த விமானமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த 6ம் தலைமுறை யுத்த விமானத்தின் வல்லமைகள் இதுவரை அறியப்படவில்லை. இந்த விமானத்தில் வழமையாக பின்பகுதியில் இருக்கும் நிலைக்குத்து வால் (vertical tail fin) இருக்கவில்லை. சிலர் இதில் 3 இயந்திரங்கள் (engine) இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். வழமையாக யுத்த விமானங்கள் 1 அல்லது 2 இயந்திரங்களை மட்டுமே கொண்டிருக்கும்.
அமெரிக்காவும் Next Generation Air Dominance (NGAD) என்ற திட்டத்தில் 6ம் தலைமுறை யுத்த விமானம் ஒன்றை தயாரிக்கும் பணியில் உள்ளது. அது இதுவரை பொது இடங்களில் காணப்படவில்லை.