கட்டாரின் QatarEnergy என்ற நிறுவனமும் சீனாவின் Sinopec என்ற நிறுவனமும் 27 ஆண்டு கால LNG எரிவாயு உடன்படிக்கை ஒன்றில் திங்கள் கையொப்பம் இட்டுள்ளன. இந்த உடன்படிக்கையின் மொத்த பெறுமதி சுமார் $60 பில்லியன் ஆக இருக்கும். உலக வரலாற்றில் இதுவே மிக நீண்ட கால LNG உடன்படிக்கை ஆகும்.
இன்று செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி கட்டார் ஆண்டு ஒன்றுக்கு 4 மில்லியன் தொன் LNG எரிவாயுவை சீனாவுக்கு 27 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யும்.
ஞாயிறு கட்டாரில் FIFA 2022 உதைபந்தாட்ட போட்டி ஆரம்பமாகி இருந்ததுவும், அதன் ஆரம்ப நிகழ்வுக்கு (opening ceremony) ஐரோப்பிய தலைவர்கள் எவரும் செல்லவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா மீது தடைகளை விதிக்கும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எரிபொருள் வரவு தடைப்பட கட்டாரின் எரிவாயுவை கொள்வனவு செய்ய விரும்பின. ஆனால் ஐரோப்பிய நாடுகள் கட்டாருடன் நீண்ட கால கொள்வனவு உடன்படிக்கைகளுக்கு செல்ல மறுத்தன. அதனால் ஜெர்மனிக்கும் கட்டாருக்கும் இடையிலான LNG எரிபொருள் பேச்சு இழுபட்டு செல்கிறது.
ஜெர்மனி உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் கட்டாரின் FIFA 2022 ஆரம்ப விழாவை புறக்கணித்ததும் கட்டாரின் வெறுப்புக்கு காரணம் ஆகலாம்.