சீனா இன்று வெள்ளிக்கிழமை காலை விண்கலம் ஒன்றை இரகசியமாக ஏவி உள்ளது. இதன் நோக்கத்தை அறிய முயற்சிக்கின்றது மேற்கு. இது மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய, பயணிகளை கொண்டிராத விண்விமானமாக (space plane) இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இன்றைய ஏவலில் பங்குகொண்ட அனைவரையும் இது தொடர்பான விபரங்கள் எதையும் வெளியிட வேண்டாம் என்றும், படங்கள், வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்றும் பணிக்கப்பட்டு உள்ளது. சீன அரசும் முழுமையான விபரங்களை இதுவரை வெளியிடவில்லை.
இந்த விண்விமானம் சிலகாலம் விண்ணில் பயணித்து பின் தரை இறங்கும். வளிமண்டலத்தினூடு விழும் பொழுது இவ்வகை விண்விமானத்தின் முற்பகுதி மிகவும் வெப்பமாகும். சிலவேளைகளில் அவ்வெப்பம் தீ பற்றவும் காரணமாகும்.
அமெரிக்காவும் X-37B என்ற இவ்வகை பயணிகள் இல்லாத விண்விமான தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இது அமெரிக்காவின் தற்போது கைவிடப்பட்ட Space Shuttle போல் பலமுறை பயன்படுத்தக்கூடியது. ஆனால் Space Shuttle சில இறங்கும் பொழுது விபத்துகளுக்கு உள்ளாகியதால் அவற்றின் பயன்பாடு நிறுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் ஆளில்லா X-37B விண்விமானம் 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலத்தில் தொடர்ந்து 730 தினங்கள் விண்ணில் வலம்வந்து பின் தரையிறங்கி இருந்தது.