அண்மையில் ஐரோப்பா சென்றிருந்த அமெரிக்க சனாதிபதி பைடென் பயணிகள் விமானம் தயாரிப்பு தொடர்பாக கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையே நிலவிவந்த முரண்பாடுகளை தீர்த்து இருந்தார். அந்த இணக்கத்துக்கு பிரதான காரணம் அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான Boeing மற்றும் ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான Airbus இரண்டும் இணைந்து சீனா புதிதாக தயாரிக்கும் பயணிகள் விமானங்களுக்கு எதிராக ஐக்கியமான போட்டியை வழங்குவதே.
சீனா ஏற்கனவே ARJ21 (Advance Regional Jet 21) என்ற 90 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய விமானத்தை வெற்றிகரமாக தயாரித்து சேவைக்கு விட்டுள்ளது. தற்போது இந்த வகை விமானங்கள் 73 சேவையில் உள்ளன. மேலும் 230 இவ்வகை விமானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
தற்போது சீனா C919 என்ற 168 பயணிகள் வரை காவக்கூடிய நடுத்தர விமானத்தையும் தயாரித்துள்ளது. இந்த விமானம் சீனா உள்ளே சேவையில் ஈடுபட வெள்ளிக்கிழமை சட்டப்படியான அனுமதி பெற்றுள்ளது. சீனாவில் அனுமதி கிடைத்ததால் C919 விரைவில் சீன விமான சேவைகளால் சீனா நகரங்களுக்கு இடையே பயணிக்க பயன்படுத்தப்படும்.
ஆனால் அமெரிக்கா C919 விமானத்தை நசுக்க முனைகிறது. சீனாவின் C919 அமெரிக்காவின் Boeing 737 MAX மற்றும் ஐரோப்பாவின் Airbus 320 ஆகிய விமானக்களின் அளவை ஒத்தது. அதனால் Boeing 737, Airbus 320 ஆகிய இரண்டும் தமது சந்தையை சீன C919 க்கு இழக்கும் என்று அமெரிக்கா பயப்படுகிறது.
சீனாவின் C919 அமெரிக்காவில் பறக்க சான்றிதழ் பெற்றாலே அமெரிக்க விமான சேவைகள் C919 விமானத்தை கொள்வனவு செய்யலாம், அமெரிக்காவில் பறக்கலாம். அத்துடன் அமெரிக்கா சான்றிதழ் வழங்கினால் ஐரோப்பா, கனடா வேறுவழியின்றி C919 விமானத்தை தமது நாடுகள் உள்ளும் அனுமதிக்கும்.
இந்த விசயத்தில் அமெரிக்காவும் ஒரு இடரில் உள்ளது. Boeing 737 Max ஏற்கனவே சீனாவில் பறக்க சான்றிதழ் பெற்று இருந்தாலும் இவற்றில் இரண்டு இந்தோனேசியா, எதியோப்பியா ஆகிய இரண்டு நாடுகளில் வீழ்ந்து அனைவரும் பலியாகி இருந்தனர். இந்த விமானத்தின் வடிவமைப்பு தவறு காரணமாகவே இவை வீழ்ந்து இருந்ததால் சீனா Boeing 737 Max விமானத்தை தடை செய்திருந்தது.
737 Max விமானம் தற்போது திருத்தி அமைக்கப்பட்டு அமெரிக்கா, கனடா, ஐரோப்பா ஆகிய இடங்களில் மீண்டும் சேவைக்கு வந்துள்ளது. ஆனால் இந்த விமானத்துக்கு மீண்டும் சான்றிதழ் வழங்குவதை சீனா இழுத்தடிக்கிறது. சீனாவின் C919 விமானத்துக்கான அமெரிக்க சான்றிதழ் அமெரிக்காவின் 737 Max விமானத்துக்கான சீன சான்றிதழுடன் இணக்கத்துக்கு வரலாம்.
சீனா சுமார் 320 பயணிகளை காவக்கூடிய மிகப்பெரிய C929 என்ற விமானத்தை தயாரிக்கும் பணிகளிலும் இறங்கி உள்ளது. இந்த விமானம் 2028ம் ஆண்டு அளவில் சேவைக்கு வரலாம். இந்த தயாரிப்பில் ரஷ்யாவும் பங்கு கொண்டுள்ளது.
சீன விமானங்களுக்கான பல பாகங்களை மேற்கு நாடுகளின் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்வனவு செய்கிறது. அதேவேளை அந்த பாகங்களை தானும் செய்ய முயற்சிக்கிறது சீனா. உதாரணமாக C919 விமானத்துக்கான இயந்திரம் தற்போது அமெரிக்காவின் GE நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஒன்றில் இருந்து பெறப்படுகிறது.
இதுவரை பயணிகள் விமான சந்தையை தம்வசம் கொண்டிருந்த அமெரிக்காவின் Boeing நிறுவனமும், ஐரோப்பாவின் Airbus நிறுவனமும் தற்போது சீனாவின் Comac நிறுவனத்துடன் பங்கிட தள்ளப்பட்டுள்ளன.