தனியார் நிறுவனங்கள் மூலம் இயங்கும் டியூஷன் (tuition) வகுப்புகளுக்கு சீனாவில் பெரும் தடை நடைமுறை செய்யப்பட்டுள்ளது. தனியார் டியூஷன் நிறுவனங்கள் பெரும் பணம் உழைக்கும் நிறுவனங்கள் ஆவதை சீனா தடுக்க முனைகிறது. அரச கல்வி இலவசம் என்றாலும், சிறுவர்களுக்கான படிப்பு செலவு அதிகரிப்பதும் தம்பதிகள் குழந்தைகளை பெறாமைக்கு காரணம் என்று சீன அரசு கருதுகிறது.
புதிய சட்டப்படி சனி, ஞாயிறு, விடுமுறை ஆகிய தினங்களில் டியூஷன் வகுப்புக்களை கொண்டிருக்க முற்றாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பாடசாலை வயதுக்கு முன் சிறுவர்களுக்கு டியூஷன் வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
புதிதாக டியூஷன் கல்வி நிலையங்களை ஆரம்பிக்கவும் அரசு அனுமதி வழங்காது. அவ்வாறான நிலையங்களுக்கு IPO (initial public offering) மூலன் முதல் திரட்டவும் அரசு அனுமதி வழங்காது.
இந்த அறிவிப்பின் பின் பல பெரும் டியூஷன் நிறுவனங்களின் பங்குச்சந்தை பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. New Oriental என்ற டியூஷன் நிறுவனத்தின் பங்கு 41% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் அந்த நிறுவனத்தின் பங்கு சந்தை பெறுமதி $4.5 பில்லியனால் வீழ்ச்சி அடைந்துள்ளது. Scholar Education Group என்ற நிறுவனத்தின் பங்கு 28.5% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. China New Higher Education Group நிறுவனத்தின் பங்கு 8.5% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
சீனாவின் டியூஷன் சந்தையின் பெறுமதி $125 பில்லியன் என்று கூறுகிறது Frost & Sullivan அமைப்பு. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் $10 பில்லியன முதலீடுகளை டியூஷன் நிறுவனங்கள் திரட்டி உள்ளன.
2015ம் ஆண்டில் சுமார் 202 மில்லியன் சீன மாணவரே டியூஷன் வகுப்புகளுக்கு சென்று இருந்தனர். ஆனால் 2019ம் ஆண்டில் அத்தொகை 325 மில்லியன் ஆக அதிகரித்து உள்ளது. அது மொத்த மாணவர் தொகையின் 20% மட்டுமே. 2024ம் ஆண்டில் அத்தொகை 659 மில்லியன் ஆக அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது மொத்த மாணவர் தொகையின் 48% ஆக இருக்கும்.