சீனா சென்று வைத்தியர்களாக கல்வி கற்ற இந்தியர் தாம் இந்தியா திரும்பும்போது கடுமையான தேர்வு முறைகள் மூலம் புறக்கணிக்கப்படுவதாக கூறுகின்றனர். அரசியல் நோக்கம் கொண்ட இந்த புறக்கணிப்பை எதிர்த்து சீனாவில் கற்ற இந்திய வைத்தியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
2003 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டவர் சீனா சென்று 6 ஆண்டுகள் மருத்துவம் கற்கும் வசதியை சீனா ஏற்படுத்தி இருந்தது. 2004 ஆம் ஆண்டு 150 இந்தியர் சீனா சென்று வைத்தியர்களாக கல்வி கற்றனர். விரைவில் இந்த எண்ணிக்கை பெரும் தொகையாக வளர்ந்தது. தற்போது 7,000 முதல் 8,000 வரையான இந்தியர் சீனா சென்று மருத்துவம் கற்கின்றனர்.
ஆனாலும் சீனாவில் மருத்துவம் கற்கும் இந்தியர் நாடு திரும்பும்போது கடுமையான இந்திய Foreign Medical Graduate Examination (FMGE) சோதனையில் சித்தி பெற்றால் மட்டுமே இந்தியாவில் சேவையாற்ற முடியும்.
இந்த வருடம் FMGE சோதனையில் பங்கொண்ட 17,789 பேரில் 1,697 பேர் மட்டுமே சித்தி பெற்றுள்ளனர். அது 9.5% மட்டுமே.
கடந்த வருடம் சீனா, ரஷ்யா போன்ற வெளிநாடுகள் சென்று மருத்துவம் பயின்ற 15,000 பேர் மேற்படி சோதனையில் பங்குகொண்டு இருந்தாலும் 4,242 பேர் மட்டுமே சித்தி அடைந்து உள்ளனர். அது 27.4%. அதிலும் சீனா சென்று மருத்துவம் கற்றவர்கள் 12% பேர் மட்டுமே சித்தி பெற்று இருந்தனர்.
கரோனா காரணமாக மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையிலும் தமக்கு அனுமதி வழங்காமைக்கு சீன எதிர்ப்பு அரசியலே காரணம் என்று கருதுகின்றனர் சீனாவில் பயின்ற இந்திய மருத்துவர்.
அமெரிக்கா, பிரித்தானியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகளில்மருத்துவம் கற்கும் இந்தியர் நாடு திரும்பி FMGE சோதனையில் பங்குகொள்ளாமலேயே அங்கு மருத்துவ சேவை செய்ய முடியும்.
FMGE காரணமாக சீனாவில் மருத்துவம் கற்ற இந்தியர் பலர் மேற்கு நாடுகள் சென்று இலகுவில் மருத்துவ சேவையை தொடர்கின்றனர்.