சீனாவின் Yuan Wang 5 என்ற ஆய்வு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செல்ல இலங்கை அரசு சனிக்கிழமை அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தாலும் Yuan Wang 5 இலங்கை துறைமுகத்துக்கு வருகிறது.
சீனா இது ஒரு ஆய்வு கப்பல் என்று கூறினாலும் இந்தியாவும், அமெரிக்காவும் இதை உளவுபார்க்கும் கப்பலாகவே கருதுகின்றன. இந்த கப்பல் செய்மதி மூலமான தொடர்புகளையும், ICBM போன்ற நீண்ட தூரம் பாயும் ஏவுகணை அவதானிப்புகளையும் செய்ய வல்லது.
அம்பாந்தோட்டை துறைமுகம் தற்போது 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவின் கையில் இருப்பதாலும், இந்த கப்பலில் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்றபடியாலும் இதன் வரவை இலங்கை தடுப்பது கடினமான காரியம்.
இந்த மாதம் 11ம் திகதியே இந்த கப்பல் இலங்கைக்கு வர இருந்திருந்தாலும் இந்திய, அமெரிக்க எதிர்ப்புகள் காரணமாகவே வரவு பின்தள்ளி இருந்தது. இலங்கை கப்பலின் வரைவை காலவரையறை இன்றி பின் போட கேட்டிருந்தாலும் சீனா அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
Yuan Wang 5 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 16ம் திகதி முதல் 22ம் திகதி வரையான காலத்தில் தங்க வெளியுறவு அமைச்சு அனுமதி வழங்கி உள்ளது என்று Nirmal Silva கூறியுள்ளார். மேற்படி கப்பல் தற்போது தென்கிழக்கே சுமார் 1,000 km தொலைவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.