COMAC என்ற சீன பயணிகள் விமான தயாரிப்பு நிறுவனம் சுமார் 400 பயணிகளை காவக்கூடிய மிகப்பெரிய விமானம் ஒன்றை தயாரிக்கும் பணியை ஆரம்பித்து உள்ளது. C939 என்ற அழைக்கப்படும் இந்த விமானம் அமெரிக்காவின் Boeing 777 மற்றும் ஐரோப்பாவின் Airbus 350 ஆகிய விமானங்களுக்கு போட்டியாக அமையலாம்.
இரண்டு பெரிய இயந்திரங்களை கொண்டிருக்க உள்ள C939 விமானம் சுமார் 13,000 km தூரம் பயணிக்க வல்லதாக இருக்கும்.
COMAC ஏற்கனவே ARJ21 (Advanced Regional Jet) என்ற குறுந்தூர பயணிகள் விமானத்தை 2016ம் ஆண்டு முதல் விற்பனை செய்கிறது. இந்த வகை விமானம் இதுவரை சுமார் 10 மில்லியன் பயணிகளை காவி உள்ளது.
அண்மையில் சேவைக்கு வந்த C919 விமானம் தற்போது China Eastern Airways விமான சேவையால் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு இதுவரை சுமார் 1,500 கொள்வனவுகள் (orders) உள்ளன. இது சுமார் 200 பயணிகளை காவ வல்லது.
COMAC தற்போது சுமார் 300 பயணிகளை காவ வல்ல C929 என்ற நடுத்தர அளவிலான விமான தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இதை முதலில் ரஷ்யாவுடன் இணைந்தே சீனா தயாரிக்க இருந்தும் பின்னர் சீனா மட்டுமே தயாரிப்பை தொடர்கிறது. இது Boeing 787 Dreamliner, Airbus 330 neo ஆகியவற்றுக்கு போட்டியாக அமையலாம்.
சீனாவில் விமான பயணம் ஆண்டுக்கு 10.5% ஆல் கடந்த 10 ஆண்டுகளில் வளர்ந்து உள்ளது. அதற்கு ஏற்ப சீன 240 புதிய விமான நிலையங்களை கட்டி உள்ளது.
அமெரிக்காவின் Boeing விமான நிறுவன கணிப்பின்படி 2040ம் ஆண்டு வரையான காலத்தில் சீன விமான சேவை நிறுவனங்கள் 8,700 புதிய விமானங்களை கொள்வனவு செய்யும். அதனால் சீன சந்தையே சீன விமானங்களுக்கு போதுமானதாக இருக்கும்.