Toronto நகரில் நிலைகொண்டிருந்த சீனா தூதரக அதிகாரி (diplomat) ஒருவரை கனடா வெளியேற்றியதன் பின் சீனா ஷாங்காய் (Shanghai) நகரில் நிலைகொண்டிருந்த கனடிய தூதரக அதிகாரி ஒருவரை இன்று வெளியேற அறிவித்து உள்ளது.
Zhao Wei என்ற சீன அதிகாரியையே கனடா நேற்று திங்கள் வெளியேற்றி இருந்தது. இவர் கனடிய பாராளுமன்ற உறுப்பினரான Michael Chong என்பவரை மறைமுகமாக மிரட்டியதாக கனடா கூறுகிறது. Chong சீனாவின் Uighur முஸ்லீம் விசயத்தில் சீனாவை குற்றம் கூறுபவர்.
இன்று சீனா ஷாங்காய் நகரில் பணியாற்றிய கனடிய தூதரக அதிகாரியான Jennifer Lynn என்பவரையே மே 13ம் திகதிக்கு முன் சீனாவில் இருந்து வெளியேற சீனா பணித்துள்ளது.
2018ம் ஆண்டு அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க கனடா Meng Wanzhou என்ற சீனா Huawei நிறுவன அதிகாரியை வான்கூவர் விமான நிலையத்தில் கைது செய்திருந்தது. பின்னர் அந்த வழக்கை அமெரிக்கா கைவிட, Wanzhou கனடாவால் விடுதலை செய்யப்பட்டார். பதிலுக்கு சீனாவும் கைது செய்திருந்த கனடியார் இருவரை விடுதலை செய்திருந்தது.
கனடாவும், சீனாவும் அண்மைக்காலங்களில் அடிக்கடி முரண்பட்டு வருகின்றன.