இளவழகன் (2024-11-07)
இலங்கை பொது தேர்தலுக்கு மேலும் ஒரு கிழமை மட்டுமே உள்ளது.
இலங்கையின் பெரும்பான்மை சிங்களம் அண்மையில் இரண்டு தடவைகள் உலகம் நம்ப முடியாத காரியங்களை செய்து சாதனை படைத்துள்ளது. ஒன்று சனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை பின் கதவால் நாட்டை விட்டு ஓட விரட்டியது. மற்றையது இடதுசாரியான அநுர குமார திஸாநாயக்காவை (AKD) சனாதிபதி ஆக்கியது. அதே சிங்களம் நவம்பர் 14ம் திகதி அநுர தலைமையிலான NPP அணியின் கையில் பாராளுமன்றத்தை வழங்குவதன் மூலம் தனது மூன்றாம் சாதனையையும் செய்யலாம்.
கோத்தபாய ஒரு சாதாரண நபர் அல்ல. பல வெள்ளை வான் கடத்தல்களுக்கும், படுகொலைகளுக்கும் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தன. Lasantha Wickremantunge படுகொலை காரணமாக அமெரிக்காவிலும் கோத்தபாயாவுக்கு எதிராக வழக்கு ஒன்று இருந்தது. அவ்வகையான ஒருவரை பெயர் சொல்லி குறிப்பிடக்கூடிய ஒரு தனிநபர் தலைமை இன்றி, “Gotta Go Gama” என்ற நோக்கை மட்டும் தலைமையாக கொண்டு போராடி அந்த நோக்கை 2022ம் ஆண்டு வென்றது சிங்களத்தின் அரகளைய (aragalaya) போராட்டம். அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற புரட்சிக்கும் வெற்றிகரமாக முடிந்த அரகளைய போராட்டம் ஒரு முன்மாதிரியாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
கோத்தபாய நாட்டை விட்டு ஓடிய பின் ரணில் பின்கதவால் ஆட்சியை கைப்பற்ற அரகளைய மரணித்து விட்டதாகவே கருதப்பட்டது. ஒரு அரகளைய உறுப்பினர் நாட்டை விட்டு ஓட முனைந்தபோது அவர் விமானத்தில் இருந்து ரணில் அரசால் இழுத்து எடுக்கப்பட்டார். ஆனால் அரகளைய மக்கள், குறிப்பாக சிங்கள இளம் சந்ததி அடுத்த தேர்தல் வரை பொறுமையாக, தம் நோக்கில் திடமாக இருந்தது. 2024ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் வந்தபோது AKD யை சனாதிபதியாக தெரிவு செய்து தமது திடப்பாட்டை மீண்டும் காட்டியது சிங்களம். 2022 முதல் 2024 வரையான இரண்டு ஆண்டுகளாக சிங்களத்தின் மனம் மாறவில்லை. AKD யின் வெற்றி இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவே எதிர்பாராத பெரும் திருப்பம்.
சிங்களம் செய்த இந்த இரண்டு சாதனைகளிலும் தமிழ் கிழட்டு அரசியல் பங்கெடுத்து இருக்கவில்லை. அரகளையவில் பங்கெடுத்தால் தாம் தமிழ் பகுதிகளில் செய்யும் அரசியல் நாட்டாண்மைக்கு பங்கம் தோன்றிவிடுமோ என்ற பயம் தமிழ் கிழட்டு அரசியலுக்கு. நோவின்றி, முறிவின்றி வெறும் தமிழ் தேசியம் மட்டுமே பேசி அனுபவிக்கும் பெரும் சுகபோகங்களை யார் கைவிடுவார்?
பதவியை இழந்த பின்னர் மட்டுமல்ல பாடையில போன பின்னும் உறவுகள் அனுபவிக்க கொழும்பில் மாளிகைபோல் வீடு, பணியாளர், இலவச மின்சார, நீர் வசதிகள் வேறு எப்படி கிடைக்கும். தன் வாழ்க்கை முழுவதும் சிங்கள தேசியத்தின் நீதிக்கு அதிபதியாகி, பேரருடன் சிங்களத்தில் மழலை பேசி பின் ஓய்வு காலத்தில் மட்டும் தமிழ் தேசியம் பேச கிடைத்தது சாராய கடை அனுமதி. இந்த பட்டியலுக்கு முடிவில்லை. முன்னர் தமிழ் தேசியம் பேசியோர்க்கு ஒரு பேஜிரோ ஜீப்பும், மேசைக்கு கீழால் தன்னவர்க்கு வழங்க job-bank மூலம் சில பதவிகளும் மட்டுமே கிடைத்தன. ஆனால் தற்போது முன்னரை விட பல மடங்கு கொள்ளை இலாபம் இவர்களுக்கு.
ஆனால் நடைமுறை உண்மை இதுதான்; தற்போது இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல நாளை இலங்கையில் பிறக்கப்போகும் தமிழ் சந்ததியும் இலங்கை குடியுரிமை கொண்டவராகவே வாழ்வார்கள். இவர்களின் பிறப்பு, படிப்பு, வேலைவாய்ப்பு, ஓய்வூதியம் எல்லாமே இலங்கைக்குள் தான் அமையும். நன்மையோ, தீமையோ சிங்களம் அனுபவிப்பதையே இலங்கை தமிழரும் அனுபவிப்பர். அதை உணர்ந்தாவது இலங்கை தமிழர் இலங்கையில் ஒரு ஊழல் அற்ற அல்லது ஊழல் மிக குறைந்த ஆட்சி அமைவதற்கு உறுதுணையாக அமைய வேண்டும்.
சிங்கள அரசியல் இளையோர் கைகளுக்கு சென்றாலும் இலங்கை தமிழரின் அரசியல் தற்போதும் பழைய கிழடுகளின் தலைமைகளுள் மாண்டு உள்ளது. அப்பன் காலம் முதல், பிள்ளை காலம் ஊடாக, பேரன் காலம் வரை தேசியம், தன்னாட்சி என்ற ஒரேயொரு பேசு பொருளை மட்டும் வைத்து வயிறு வளர்க்கிறது கிழட்டு தமிழ் அரசியல்.
எத்தனை தடவைகள் அடுத்த பொங்கலுக்கு தீர்வு என்று கூறியது இந்த கிழட்டு தமிழ் அரசியல்? நீங்களும் புது பானையுடன் அந்த பொங்கலுக்காக ஆவலுடன் இருந்தீர்கள். தீர்வு கிடைத்ததா? எத்தனை தடவைகள் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்றார்கள். நீங்களும் அந்த தீபாவளிக்காக ஆட்டுடன் ஆவலாக இருந்தீர்கள்? தீர்வு கிடைத்ததா? இவர்கள் இம்முறை கூறுவதையே அடுத்த தேர்தலிலும் கூறுவார்கள் அதற்கு அடுத்து வரும் தேர்தல்களிலும் கூறுவார்கள். தேசிய, தன்னாட்சி பேச்சால் இவர்களுக்கு கொள்ளை இலாபம். ஆனால் சாதாரண தமிழருக்கு?
இலங்கை தமிழ் இம்முறை ஏன் அநுர தலைமையிலான NPP அணிக்கு வாக்களிக்கக்கூடாது? இந்த வாக்கு ஜே.வி.பி க்கான வாக்காக இருக்க வேண்டிய அவசியமில்லை, இடதுசாரிகளுக்கான வாக்காக இருக்க வேண்டிய அவசியமில்லை, டில்வின் சில்வாவுக்கான வாக்காக இருக்க வேண்டிய அவசியமில்லை. இம்முறை உங்கள் வாக்கு AKD தலைமையிலான ஆட்சிக்கான வாக்காக மட்டும் இருக்கலாமே. அநுர ஆட்சி இலங்கை அரசியலில் ஒரு 10% ஊழலை ஒழித்தாலே போதும், அது IMF இடமிருந்து $10 பில்லியன் கடன் பெறுவதிலும் நயமானது, சிறப்பானது.
தேசியம், தன்னாட்சி விசயத்தை முற்றாக கைவிடவேண்டும் என்றில்லை. இந்த விசயத்தை மிக பாதுகாப்பான பெட்டகம் ஒன்றில் பத்திரமாக பூட்டி வைத்துவிட்டு அடுத்த தேர்தலில் வேண்டுமானால் மீண்டும் தேசியம், தன்னாட்சி பேசலாம். அடுத்த தேர்தலிலும் இதைத்தானே எமது கிழட்டு தமிழ் அரசியல் பேச உள்ளது.