Aditya Singh என்ற 36 வயது அமெரிக்க Los Angels வாசி சிக்காகோ நகரில் உள்ள O’Hare விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்கள் வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு சோதனைகளின் பின் பயணிக்க உள்ள பயணிகளை மட்டுமே கொண்டிருக்கும் பகுதியிலேயே இவர் வாழ்ந்தமை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 19ம் திகதி Los Angels நகரில் இருந்து விமானம் மூலம் O’Hare வந்த இவர் ஜனவரி 16ம் திகதி வெள்ளிக்கிழமை வரை பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களில் அகப்படாது வாழ்ந்துள்ளார். இவர் மற்றைய பயணிகளிடம் இருந்து உணவுகள் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அவரை United Airlines ஊழியர்கள் விசாரணை செய்தபொழுது அவர் ஒரு விமான நிலைய பணியாளர் ஒருவரின் அடையாள அட்டையை காண்பித்து உள்ளார். விமான நிலைய manager ஒருவருக்கு உரிய அந்த அடையாள அட்டை அக்டோபர் மாதம் தொலைந்திருந்தது.
அவரை கைது செய்து நீதிமன்றம் அழைத்தபோது நீதிபதி எவ்வாறு அவரால் 3 மாதங்கள் அதிகாரிகளின் கண்களில் அகப்படாது வாழ முடிந்தது என்று வியந்துள்ளார். தான் கரோனாவுக்கு பயந்தே பயணிக்காது விமான நிலையத்தில் வாழ்ந்தாக Aditya கூறியுள்ளார்.
அக்டோபர் மாதம் இவர் சிக்காகோ பறந்த நோக்கம் என்ன, ஏன் அவர் அப்போது விமான நிலையத்தை விட்டு வெளியேறவில்லை, ஏன் இவரின் உறவினர்கள் இவரை தேடவில்லை போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.