சந்திரனில் கருகிய பருத்தி தளிர்

Change4

அண்மையில் சீனாவின் Chang’e என்ற விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தில், பூமிக்கு தெரியா பக்கத்தில், தரையிறங்கி இருந்தது. இக்கலத்தில் ஆய்வு நோக்கில் சில பொருட்களும் எடுத்து செல்லப்பட்டது. அப்பொருட்களில் தளிர்க்கவிருந்த பருத்தி தாவரமும் ஒன்று. அந்த விண்கலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒன்றில் இருந்த இந்த பருத்தி எதிர்பார்த்தபடியே சந்திரனில் தரைதட்டிய பின் தளிர் விட்டு இருந்தது. ஆனால் அந்த தளிர் மின் துண்டிப்பு காரணமாக தற்போது கருகிவிட்டது.
.
இந்த பருத்தி தளிர் இரண்டு நாட்களுக்கு நலமாக வளர்ந்துள்ளது. ஆனால் அந்த விண்கலத்தில் மின்னுக்கு தட்டுப்பாடு தோன்றியபோது சீன விஞ்ஞானிகள், மின்னை சேமிக்கும் நோக்கில், பருத்தி தாவரத்தின் பயன்பாட்டுக்கு செலுத்தப்பட்ட மின்னை துண்டித்து விட்டனர். அப்போதே இந்த பருத்தி தாவரம் கருகி உள்ளது.
.
பருத்தி தளிர் கருகிய போது சந்திரனின் மேற்பரப்பில் வெப்பநிலை சுமார் 120 C (250 F) ஆக இருந்துள்ளது. இந்த வெப்பநிலை பருத்தி தாவரத்துக்கு மிகையானது.
.
சந்திரன் தன்னை தானே சுற்ற 27 (பூமி) நாட்கள் தேவைப்படுவதால், அங்கு சுமார் 13.5 நாட்கள் பகலாகவும், 13.5 நாட்கள் இரவாகவும் இருக்கும். அதனால் அங்கு பகலில் வெப்பநிலை 127 C வரை உயர்ந்தும், இரவில் – 173 C  வரை தாழ்ந்தும் இருக்கும்.
.
மனிதத்துக்கு தெரிந்த வரையில் இந்த பருத்தி தளிரே பூமிக்கு அப்பால் தள்ளிவிட்ட முதலாவது தாவரமாகும்.
.