பத்திரிகையாளர் ஜமால் கசோகியை (Jamal Khashoggi) படுகொலை செய்த காரணத்தால் சவுதி இளவரசர் முகமத் பின் சல்மான் (Mohammed bin Salman) மீது வசைபாடி, அவருடனான நேரடி தொடர்புகளை தவிர்த்த அமெரிக்க சனாதிபதி தற்போது அந்த கொள்கைகளை கைவிட்டு சவுதி சென்று சல்மானை சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகை தற்போது அவ்வாறு திட்டம் ஒன்றும் இல்லை என்று பகிரங்கமாக கூறினாலும், மறைவில் பைடெனின் சவுதி பயணத்துக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கசோகி கொலைக்கு சல்மான் நிச்சயம் “pay the price” என்று 2019ம் ஆண்டு பைடென் கூறி இருந்தார். சவுதியை ஒரு pariah நாடு என்றும் பைடென் கூறி இருந்தார். அத்துடன் பைடென் சல்மானுடன் நேரடி தொடர்புகள் எதையும் கொண்டிரார் என்றும் அக்காலத்தில் கூறப்பட்டது.
2021ம் ஆண்டு அமெரிக்க உளவு பிரிவு வெளியிட்ட அறிக்கை கசோகி கொலைக்கும் சலமானுக்கும் இடையில் நேரடி தொடர்பு உண்டு என்று கூறி இருந்தது.
சவுதியிடம் இருந்து எண்ணெய் பெறுவது, சவுதி சீனா பக்கம் முற்றாக சரிவதை தடுப்பது என்பனவே அமெரிக்காவின் தற்போதைய பிரதான நோக்கங்கள்.
இந்திய பிரதமர் மோதி மீதும் அமெரிக்கா ஒரு காலம் தடை விதித்து இருந்தது. மோதியின் ஆட்சியில் குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர் கொலை செய்யப்பட்டதே அக்கால தடைக்கு காரணம். மோதிக்கு விசா வழங்கவும் அமெரிக்கா மறுத்தும் இருந்தது. ஆனால் மோதி பிரதமர் ஆனபின் செங்கம்பளம் விரித்து மோதியை வரவேற்றது அமெரிக்கா.