அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது செயற்பாடுகளுக்கு துணைபோக மறுக்கும் கொலம்பியா என்ற தென் அமெரிக்க நாட்டின் மீது 25% அவசரகால இறக்குமதி வரியையும், விசா தடைகளையும் ஞாயிரு விதித்துள்ளார்.
ஞாயிரு முதல் கொலம்பியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கொலம்பியா நாட்டவருக்கு விசா வழங்கும் பணிகளையும் முற்றாக நிறுத்தி உள்ளது. கொலம்பிய சனாதிபதிக்கு நெருங்கியவர்கள் மீதும் ரம்ப் தடைகளை விதித்துள்ளார்.
கொலம்பியா மீதான மேற்படி 25% இறக்குமதி வரி ஒரு கிழமைக்கு பின் 50% ஆக அதிகரிக்கும் என்றும் ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலம்பியா ஒரு ஆண்டில் சுமார் $14 பில்லியன் பெறுமதியான கோப்பி போன்ற பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது.
அமெரிக்கா சென்ற தென் அமெரிக்க நாட்டவரை திருப்பி அனுப்பும் விமானங்களை கொலம்பியா ஏற்க மறுப்பதாலேயே ரம்ப் விசனம் கொண்டுள்ளார்.
ஏற்கனவே பிரேசில், குவாட்டமாலா ஆகிய தென் அமெரிக்க நாடுகளுக்கும் அமெரிக்க இராணுவ விமானங்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை திருப்பி அனுப்பியுள்ளது.