காசாவில் மரணித்தோர் தொகை குறைந்தது 70,000

காசாவில் மரணித்தோர் தொகை குறைந்தது 70,000

காசாவில் இஸ்ரேல் செய்யும் தாக்குதல்களுக்கு மரணித்தோர் தொகை 70,000 க்கும் மேலாக இருக்கும் என்று பிரித்தானியாவின் London School of Hygiene & Tropical Medicine (LSHTM) செய்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு The Lancet என்ற மருத்துவ வெளியீட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தொகை காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட தொகையிலும் மிக அதிகம். ஆனால் மேற்கு நாடுகளில் அரசியல்வாதிகளோ காசா சுகாதார அமைச்சின் தொகையே உண்மைக்கு அதிகம் என்று கூறி இஸ்ரேலை பாதுகாக்க முனைகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி முதல் இந்த ஆண்டு ஜூன் 30ம் திகதி வரை மட்டும் 64,260 பேர் காசாவில் மரணித்து உள்ளதாக LSHTM கூறுகிறது. ஆனால் காசா சுகாதார அமைச்சு அப்போது 37,877 பேர் மட்டுமே பலியானதாக கூறியிருந்தது.

அத்துடன் காயம் அடைந்தோர் தொகை 45,885 என்று காசா சுகாதார அமைச்சால் கூறப்பட்டாலும், உண்மையில் மரணித்தோர் தொகை 109,196 என்கிறது LSHTM.

காசா சுகாதார அமைச்சு கண்டெடுக்கப்படும் உடல்களை கொண்டே மரண தொகையை கணிப்பதாகவும், இடிபாடுகளில் இருப்பிடம் அறியப்படாது அழிந்தோரின் தொகை கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அத்துடன் காசா வைத்தியசாலைகளும் தாக்குதலுக்கு உள்ளாவதால், அவர்களின் கணிப்பு திருத்தமாக இல்லை என்றும் கூறப்படுகிறது.