மிகையான கரோனா தொற்று காரணமாக அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநில வைத்திய சேவை முறியும் நிலையில் உள்ளது. அதனால் இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டு உள்ளது.
Loas Angeles County பகுதியில் சுமார் 21% கரோனா தொற்றியோர் ICU (Intensive Care Unit) படுகைகளில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் வேகமாக குறைவடைந்து வருகின்றன.
சில வைத்தியசாலைகளில் நோயாளிகளை ஏற்றிவரும் அம்புலன்ஸ் வண்டிகள் 8 மணித்தியாலங்கள் வரை வெளியே காவல் இருக்கும் நிலை தோன்றியுள்ளது. அந்த வண்டிகள் மீண்டும் புதிய 911 அவசர அழைப்புகளுக்கு செல்ல முடியாமலும் உள்ளது.
சுவாச காற்று (oxygen) வழங்கலும் அங்குள்ள 6 வைத்தியசாலைகளில் பெரும் இடரில் உள்ளது. சாதாரண நோயாளி நிமிடம் ஒன்றுக்கு 2 முதல் 6 லீட்டர் சுவாச காற்றை உள்ளெடுப்பர். ஆனால் கரோனா நோயாளிக்கு நிமிடம் ஒன்றுக்கு 40 லிட்டர் வரை தேவைப்படும் என்று வைத்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அந்த அளவு சுவாச காற்றை வழங்கும் கட்டுமானம் மேற்படி 6 வைத்தியசாலைகளிலும் இல்லை. அந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யவே இராணுவம் அழைக்கப்பட்டு உள்ளது.
வைத்தியர்கள், தாதிகள், அம்புலன்ஸ் சாரதிகள், பணியாளர் ஆகியோருக்கும் அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வியாழக்கிழமை மட்டும் 125,379 பேர் கரோனா காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளிக்கிழமை மேலும் 125,000 பேரும், சனிக்கிழமை 123,639 பேரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 20 மில்லியன் பேருக்கு கரோனா தொற்றியமை அறியப்பட்டுள்ளது. அத்துடன் 345,000 பேர் அங்கு கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.