கனடிய வங்கிக்கு அமெரிக்கா $3 பில்லியன் தண்டம்

கனடிய வங்கிக்கு அமெரிக்கா $3 பில்லியன் தண்டம்

TD Bank என்ற கனடிய வங்கிக்கு அமெரிக்க அரசு வியாழக்கிழமை $3 பில்லியன் தண்டம் விதித்துள்ளது. TD Bank தெரிந்தும் பெருமளவு பண கடத்தலுக்கு உதவியுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. TD வங்கியும் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் இயங்கும் TD Bank கனடிய TD Bank கின் கிளை நிறுவனமே. அமெரிக்க கிளை நிறுவனம் அமெரிக்காவின் கிழக்கே உள்ள 16 மாநிலங்களில் வங்கி சேவையை வழங்குகிறது. இது அமெரிக்காவில் 10ஆவது பெரிய வங்கி.

மூன்று பெரிய பண கடத்தல் கும்பல்கள் $670 மில்லியன் சட்ட விரோத பணத்தை TD Bank மூலம் கடத்தி உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இன்னொருவர் போதை விற்பனையால் பெற்ற $470 மில்லியன் பணத்தை $57,000 பெறுமதியான gift cards களை TD ஊழியருக்கு இலஞ்சமாக வழங்கி கடத்தியுள்ளார்.

இவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் $1 மில்லியன் பணத்தை காசாக ஒரே நாளில் முதலீடு செய்து பின் கடத்தியுள்ளார் என்கிறது அமெரிக்கா. இத்தொகை அனுமதிக்கப்பட்ட தினசரி தொகையிலும் மிக அதிகம் என்றபடியால் TD ஊழியர்கள் சிலர் கேள்விகளை எழுப்பி இருந்தாலும் வங்கி அதிகாரிகள் செவிமடுக்காது இருந்துள்ளனர்.

இன்னொரு கும்பல் 5 TD ஊழியர்களுடன் இணைந்து $39 மில்லியன் போதை விற்பனை மூலம் பெற்ற பணத்தை கொலம்பியா என்ற தென் அமெரிக்க நாட்டுக்கு கடத்தி உள்ளனர்.

இன்னொரு கும்பல் குறைந்தது 5 பினாமி நிறுவங்கள் மூலம் $100 மில்லியன் பணத்தை கடத்தியுள்ளது.

 இந்த செய்தியினால் TD வங்கியின் பங்குச்சந்தை பங்குகளின் பெறுமதி வியாழன் 5% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.