Margaret Mac Neil என்ற கனடிய பெண் Tokyo 2020 ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் butterfly நீச்சலில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். தற்போது 21 வயதான இவரின் வாழ்க்கை இன்னோர் காரணத்தாலும் பாராட்டை பெற்றுள்ளது.
2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ம் திகதி சீனாவின் JiuJiang என்ற நகரில் பிறந்த இவர் உடனேயே பெற்றாரால் கைவிடப்பட்டு இருந்தார். ஒரு குழந்தை மட்டும் பெறலாம் என்ற அக்கால சீன கொள்கையால் ஆண் குழந்தைகள் மீது நாட்டம் கொண்ட பல பெற்றார் பெண் குழந்தைகளை கைவிட்டு இருந்தனர். சுகதேகியான இவரும் அந்த காரணத்தாலேயே கைவிடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இவரை Ontario மாநிலத்து London நகரில் வாழும் Mac Neil குடும்பம் சில மாதங்களில் தத்தெடுத்து இருந்தது. அங்கு Sir Frederick Banting Secondary பாடசாலையில் கல்வி கற்ற இவர் பின்னர் அமெரிக்காவின் University of Michigan என்ற பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்கிறார்.
இவர் 100 மீட்டர் நீச்சலில் 0.05 செக் வேகமாக சென்று சீனா போட்டியாளரான Zhang YuFei என்பவரை இரண்டாம் இடத்துக்கு தள்ளி தங்க பதக்கத்தை வென்று இருந்தார். 2016ம் ஆண்டு இடம்பெற்ற முன்னைய ஒலிம்பிக் போட்டியில் இவர் 6ம் இடத்தை அடைந்திருந்தார்.
1999ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையான காலத்தில் அமெரிக்கர் 82,000 சீன குழந்தைகளை தத்து எடுத்துள்ளனர். அதில் 84% குழந்தைகள் பெண் குழந்தைகள்.
ஒரு குழந்தை சட்டமும், ஆண் குழந்தை மீதான நாட்டமும் தற்போது 30 மில்லியன் மேலதிக ஆண்கள் தொகை சீனாவில் உருவாக காரணமாக இருந்துள்ளன. ஒரு குழந்தை சட்டம் தற்போது அங்கு நடைமுறையில் இல்லை.