HSBC (Hong Kong and Shanghai Bank) தனது கனடிய வங்கி வர்த்தகத்தை கைவிட்டு வெளியேறுகிறது. HSBC வங்கி கைவிடும் கனடிய வர்த்தகத்தை Royal Bank of Canada என்ற கனடிய வங்கி $10 பில்லியனுக்கு (C$13.5 பில்லியன்) கொள்வனவு செய்கிறது.
HSBC வங்கியின் கனடிய வர்த்தகம் மிகவும் இலாபகரமானதாக இருந்தும் அது கனடாவை கைவிடுவது ஆச்சரியமாக உள்ளது. 2021ம் ஆண்டில் மட்டும் இந்த வங்கி கனடாவில் $768 மில்லியன் இலாபத்தை உழைத்து இருந்தது. அந்த ஆண்டு கனடாவிலும் மிக பெரிய நாடான அமெரிக்காவில் இருந்து HSBC $528 மில்லியன் இலாபத்தை மட்டுமே உழைத்து இருந்தது.
HSBC வங்கி 157 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியரால் Hong Kong மற்றும் Shanghai நகரங்களில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் இதன் தற்போதைய தலைமையகம் லண்டன் நகரில் உள்ளது. ஆனாலும் இதன் மிக பெரிய பங்காளர் Ping An Insurance Group என்ற சீன நிறுவனமே. Ping An தொடுத்த அழுத்தம் காரணமாகவே HSBC கனடிய வர்த்தகம் கைவிடுகிறது என்று கூறப்படுகிறது.
அண்மைக்காலங்களில் கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்வதும், மேற்கு நாடுகள் மொத்தமாக சீனாவின் வளர்ச்சியில் தடுப்புகளை போட முனைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் கனடாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி 14.4% ஆல் குறைந்து உள்ளது.
ஆனாலும் தமது வங்கி வர்த்தகத்தை ஆசியாவில் ஆழமாக பரப்பவே கனடாவை விட்டு வெளியேறுவதாக HSBC கூறியுள்ளது.
சுமார் 800,000 வாடிக்கையாளர்களை கொண்ட HSBC Canada வர்த்தகத்தை கொள்வனவு செய்வதன் மூலம் Royal Bank இலகுவில் பெருமளவு சீனர்களின் வர்த்தகங்களை பெற முனைகிறது. கனடாவில் 130 கிளைகளை கொண்ட HSBC வங்கியில் சுமார் 4,200 பேர் பணியாற்றுகின்றனர்.
HSBC வங்கி 2021ம் ஆண்டில் ஹாங் காங், பிரித்தானியா, சீனா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முறையே $5.92, $3.52, $3.33, $0.768, $0.528, $0.47 பில்லியன் இலாபங்களை பெற்று இருந்தது.