ஏற்கனவே தற்காலிக கனடிய விசா கொண்ட வெளிநாட்டவர் Flag-poling என்ற முறையை கையாண்டு தமது விசாவை புதுப்பிக்கும் விண்ணப்பத்தை துரிதப்படுத்துவதை கனடா திங்கள் இரவு (Dec 23 at 11:59pm) முதல் நிறுத்தியுள்ளது.
உதாரணமாக கனடாவில் தற்கலிக மாணவ அல்லது வேலைவாய்ப்பு விசாவை கொண்ட ஒரு வெளிநாட்டவர் அந்த விசாவை புதுப்பிக்க விரும்பின் அதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்தல் அவசியம். இந்த விசா புதுப்பித்தலுக்கு தற்போது சராசரியாக 170 தினங்கள் தேவைப்படுகிறது.
அதனால் மேற்படி தற்காலிக விசா கொண்ட சிலர் falg-poling முறையை பயன்படுத்துகின்றனர். இவர்கள் அமெரிக்க-கனேடிய தரை கடவைகள் மூலம் அமெரிக்காவுள் செல்ல முனைவர். அமெரிக்க விசாவை கொண்டிராத இவர்களை அமெரிக்கா எல்லையில் திருப்பி அனுப்பும். அது பயணம் செய்வோருக்கும் தெரியும். அவர்களின் நோக்கம் கனடாவுக்கு திரும்பி வருவதே.
அவ்வாறு எல்லையில் திருப்பி அனுப்பப்பட்ட தற்காலிக கனேடிய விசா கொண்டோர் தமது விசாவை புதுப்பிக்க புதிய விண்ணப்பத்தை கையளித்து உரிமை பெறுவார். அதாவது 170 தினங்கள் எடுக்கும் வேலையை ஒரே தினத்தில் முடிப்பர்.
இந்த செயல் அமெரிக்க மற்றும் கனடிய எல்லை அதிகாரிகளுக்கு பெரும் சுமையாக உள்ளது. அதனாலேயே இந்த முறைமை நிறுத்தப்படுகிறது. இது ஒரு சட்டவிரோத செயல் அல்ல என்றாலும், ஒரு குறுக்கு வழியாகவே கணிக்கப்படுகிறது.
2023ம் ஆண்டு 61,561 பேர் இந்த குறுக்கு வழியை பயன்படுத்தி உள்ளனர். அத்தொகை 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 90% அதிகம். இந்த ஆண்டு ஜூன் வரை இத்தொகை 32,410 ஆக உள்ளது.
இந்த விசயத்தில் அமெரிக்கா கனடா மீது விசனம் கொள்வதும் நியாயமானது.