ஐ. நா. வில் தாய்வான் தற்போது ஒரு நாடல்ல. ஐ. நா. அவையில் தாய்வான் சீனாவின் அங்கம். ஆனாலும் தாய்வான் மாஓ காலத்தில் இருந்து சொந்த ஆட்சியை செய்துவருகிறது. அதற்கு சொந்த படைகள் உண்டு. அதேவேளை சீனா தாய்வானை மீண்டும் சீனாவுடன் இணைக்கும் முயற்சியை தொடர்கின்றது.
அமெரிக்காவும் சீனாவை தண்டிக்க தேவைப்படும் பொழுதில் தாய்வானுக்கு இராணுவ உதவிகளை செய்து வருகிறது. ஆனாலும் மிகையான பொருளாதார, மற்றும் இராணுவ பலம் கொண்ட சீனாவின் பதில் நடவடிக்கைகள் தாய்வானை மெல்ல வருத்தி வருகிறது.
நேரடி யுத்தம் ஒன்றை ஆரம்பிக்காது, சீனா தாய்வானை தினமும் சீண்டி வருகிறது. சீனா செய்யும் ஒவ்வொரு சீண்டலுக்கும் தாய்வான் படைகள் மேற்கொள்ளும் பதில் நடவடிக்கைகள் தாய்வானுக்கு பலத்த செலவையும், மன உளைச்சளையும் ஏற்படுத்துகின்றன.
இன்று திங்கள் சீனாவின் 25 யுத்த விமானங்கள் தாய்வானின் தென்மேற்கு எல்லையை ஊடறுத்து சென்று உள்ளன. அதில் 14 Jian16 வகை யுத்த விமானங்கள், 4 Jian10 வகை யுத்த விமானங்கள், 4 H6K குண்டு வீச்சு விமானங்கள், 2 Y8 நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள், 1 கண்காணிப்பு விமானம் ஆகியன அடங்கும்.
இந்த ஆண்டின் முதல் 120 தினங்களில் மட்டும் சீனாவின் யுத்த விமானங்கள் 86 தினங்கள் தாய்வானின் வான் பரப்பை ஊடறுத்து சென்றுள்ளன என்று தாய்வான் பத்திரிகை ஒன்று கூறுகிறது. ஒவ்வொரு தடவையும் தாய்வான் கண்காணிப்பு மற்றும் வழிமறுப்பு படைகளை அனுப்பி உள்ளது. அதற்கு தாய்வான் பாதுகாப்பு செலவின் பெரும் பங்கு விரயமாகிறது.
அமெரிக்காவின் படைகள் பெருமளவு அப்பகுதியில் நிலைகொண்டு இருந்தாலும், சீனாவின் அணுகுமுறையை தடுக்க அமெரிக்கா எதையும் செய்ய இயலாது.