இந்த ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிதான் சீனாவில் இருந்து வந்தவர் ஒருவர் மூலம் அமெரிக்காவில் கரோனா ஆரம்பித்தது என்றே இதுவரை நம்பப்பட்டது. ஆனால் கடந்த வருடம் டிசம்பர் மாதத்துக்கு முன்னரே அமெரிக்காவில் கரோனா இருந்துள்ளமை தற்போது அறியப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் ஜனவரி 17 ஆம் திகதி வரையான காலத்தில் அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்தால் இரத்த தானம் மூலம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளை ஆராய்ந்த அமெரிக்காவின் Centers for Disease Control (CDC) அமைப்பே இந்த விபரத்தை நேற்று திங்கள்கிழமை தெரிவித்து உள்ளது. இந்த விபரம் Clinical Infectious Diseases என்ற மருத்துவ வெளியீட்டில் பதியப்பட்டுள்ளது.
மொத்தம் 7,389 இரத்ததான மாதிரிகளை மீண்டும் ஆராய்ந்த போது, அதில் 106 மாதிரிகளில் கரோனா தொற்றி, பின் அந்த நபர் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருந்தமை அறியப்பட்டுள்ளது. இவர்கள் இரத்தம் வழங்கும் நிலையில் இருந்ததால், இவர்களிடம் கரோனாவுக்கான எந்தவித அறிகுறியும் இருந்திருக்வில்லை என்பது புலனாகிறது.
மேற்படி கரோனா எதிர்ப்பு சக்தி கொண்ட இரத்த மாதிரிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லாது California, Oregon, Washington போன்ற மேற்கு மாநிலங்களிலும், Connecticut, Massachusetts, Rhode Island போன்ற கிழக்கு மாநிலங்களிலும், Iowa, Wisconsin போன்ற Midwest மாநிலங்களிலும் இருந்துள்ளது.