ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை $3,000 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க சனாதிபதி ரம்பின் இறக்குமதி வரிகள் உலக பொருளாதாரத்தை மிரட்டுவதாலும், உலகின் பல முனைகளில் யுத்தங்கள் இடம்பெறுவதாலுமே தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்து செல்கிறது.
நாடுகள், வங்கிகள், நிறுவனங்கள், தனியார் எல்லோருமே தமது கையிருப்பை பாதுகாக்க தங்கத்தில் முதலிடுகின்றனர்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், 2000ம் ஆண்டில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் $300 ஆக மட்டுமே இருந்தது.

ரம்ப் யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியை மிரட்டி இணங்க வைத்த அமெரிக்கா வரைந்த 30 தின யுத்த நிறுத்தத்தை ரஷ்யா ஏற்று கொள்ளாமையும் பொருளாதார சந்தையை மிரட்டுகிறது.
ரம்ப் NATO அணியுள் பிளவை ஏற்படுத்தியதால் பூட்டின் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரஷ்யா சார்பில் அதிக இலாபத்தை அடைய முனைகிறார். ரஷ்யா யுத்தத்தை இலகுவில் வெற்றி அடையாவிடினும், ரம்பின் வருகை பூட்டினுக்கு பெரும் நயமாக அமைந்துள்ளது.
பூட்டின் யூக்கிறேனை 2022ம் ஆண்டு ஆக்கிரமித்த பின் தங்கத்தின் விலை 60% ஆல் அதிகரித்து உள்ளது.
சீனாவும் அமெரிக்க டாலரில் சேமிப்பை வைத்தால் ஆபத்து என்பதால் பெருமளவு தங்கத்தை கொள்வனவு செய்கிறது.