2013ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவும் தமக்கிடையே Comprehensive Agreement on Investment (CAI) என்ற முதலீட்டு ஒப்பந்தத்துக்கான பேச்சுக்களை ஆரம்பித்து இருந்தனர். சுமார் 3 ஆண்டுகளுள் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று அப்பொழுது கருதப்பட்டு இருந்தாலும், 7 ஆண்டுகளின் பின்னரே அந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு விசனத்தை ஏற்படுத்தியும் உள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு தரப்பும் மற்றைய பகுதில் பாதுகாப்பாக, தடைகள் இன்றி முதலீடுகளை செய்ய வழி செய்கிறது. அத்துடன் இந்த ஒப்பந்தம் இருதரப்பும் அமெரிக்காவில் அதிக அளவில் தங்கியிருப்பதை கணிசமாக குறைக்கும். அதனால் அமெரிக்கா விசனம் கொண்டுள்ளது. பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்துள் இருந்து வெளியேறியதாலும் அமெரிக்காவின் ஆளுமை ஐரோப்பிய ஒன்றியத்துள் நலிவடைந்து உள்ளது.
இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு ஒரு பொருளாதார வெற்றி மட்டுமல்லாது, அமெரிக்காவுக்கு எதிரான அரசியல் வெற்றியும் ஆகிறது. Voice of America சேவை இந்த ஒப்பந்தம் அமெரிக்க-ஐரோப்பிய உறவுக்கு ஆபத்தானது என்றுள்ளது.
ரம்ப் காலத்தில் ஐரோப்பா சீனா பக்கம் சரிந்ததற்கு காரணம் இருந்தாலும், பைடென் வென்றபின் ஏன் ஐரோப்பா இந்த முயற்சியை கைவிடாது, விரைவாக நடைமுறை செய்தது என்று பைடென் தரப்பு வியக்கிறது. பைடென் தை மாதம் 21ம் திகதியே ஆட்சியை ஏற்பார்.
தற்போது அமெரிக்காவே ஐரோப்பாவின் முதலாவது பெரிய வர்த்தக நாடு, சீனா இரண்டாவது பெரியது. ஐரோப்பாவுக்கும், சீனாவுக்கும் இடையில் தற்போது தினமும் $1.2 பில்லியன் பெறுமதியான வர்த்தகம் இடம்பெறுகிறது. அது ஆண்டுக்கு சுமார் $438 பில்லியன். அத்தொகையை ஆண்டுக்கு $1 டிரில்லியன் ($1,000 பில்லியன்) ஆக அதிகரிக்க இரு தரப்பும் முனைகின்றன.