ஐந்து பேரை சீனா இராணுவம் கடத்தி உள்ளதாக இந்திய அமைச்சர் Kiren Rijiju இன்று கூறியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் Rajnath Singh க்கும், சீனாவின் ஜெனரல் Wei Fenghe க்கும் இடையில் எல்லை முரண்பாடுகள் தொடர்பாக மாஸ்கோவில் உரையாடல்கள் இடம்பெறும் வேளையிலேயே இந்த கடத்தல் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கடத்தப்பட்டோர் இந்திய இராணுவத்தினர் என்று இந்தியா இதுவரை கூறவில்லை. இந்திய பொதுமக்கள் முரண்பாடுகள் நிறைந்த எல்லைகளுக்கு செல்வதும் சாத்தியமில்லை.
சீனாவால் கடத்தப்பட்டோர் இந்தியாவின் Special Frontier Force (SFF) என்ற இரகசிய ஆயுத குழுவின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
SFF ஆயுத குழு உறுப்பினர்கள் திபெத்தியர் (Tibetan). 1959 ஆம் ஆண்டு, தலாய் லாமாவின் (Dalai Lama) தலைமையில் சீனாவுக்கு எதிராக புரட்சி செய்து, தோல்வியின் பின் இந்தியாவுக்கு தப்பியவர்களை கொண்டு அமைக்கப்பட்டதே SFF. அப்போது சுமார் 80,000 பேர் இந்தியாவுக்கு தலாய் லாமாவுடன் தப்பி இருந்தனர்.
இந்தியா இந்த குழு உள்ளதை என்றைக்குமே பகிரங்கமாக அறிவிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான், சீன எல்லைகளில் இவர்களை பயன்படுத்துவது உண்டு. இவர்கள் யுத்தங்களில் மரணித்தால் பணம் மட்டும் வழங்கப்படும், இராணுவ மரியாதை இடம்பெறாது. கடந்த மாதமும் ஒரு SFF உறுப்பினர் எல்லையில் பலியாகி இருந்தார்.
சாதாரண இந்திய படையினரருடன் ஒப்பிடுகையில், SFF உறுப்பினர் எல்லையோரம் உள்ள மலை பகுதியில் நன்றாக இயங்கக்கூடியவர். தற்போது இந்தியாவில் உள்ள SFF உறுப்பினர் தொகை சுமார் 5,000 என்று கூறப்படுகிறது.
இன்று கடத்தப்பட்டோர் SFF உறுப்பினர் ஆகவும், இந்திய குடியிருமை அற்றவர் ஆகவும் இருந்தால், அவர்கள் சீனராகவே சீனாவால் கருதப்படலாம். அது விசயத்தை மேலும் சிக்கலாக்கும்.