அமெரிக்கா பகைத்துக்கொண்ட ஈரான், வேனேசுவேல (Venezuela) ஆகிய இரண்டு நாடுகளும் தீடீரென தமது தொடர்புகளை அதிகரித்து உள்ளன. அதனால் முறுகுகிறது அமெரிக்கா. குறிப்பாக கடந்த சில நாட்களாக ஈரானின் பெரிய விமானங்கள் வேனேசுவேல சென்றுள்ளன. அந்த விமானங்கள் எப்பொருட்களை எடுத்து சென்றன என்பதை திடமாக அறிய முடியாது உள்ளது அமெரிக்கா.
.
கடந்த சில தினங்களில் ஈரானின் Mahan Air சேவையின் Airbus A340-300 வகை விமானங்கள் பல தடவைகள் வேனேசுவேல சென்றுள்ளன. அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Mike Pompeo மேற்படி விமானங்கள் அறியப்படாத உதவிகளை ஈரானில் இருந்து வேனேசுவேலாவுக்கு எடுத்து செல்கின்றன என்று விசனம் கொண்டுள்ளார்.
.
உலகத்திலேயே அதிகம் எண்ணெய் வேனேசுவேலாவுக்கு கீழே உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அமெரிக்காவின் தடைகள் காரணமாக அங்கு எண்ணெய் அகழ்வு, சுத்திகரிப்பு வேலைகள் முடங்கி உள்ளன. மேற்படி வேலைகளுக்கான உதிரிப்பாகங்கள், மூலப்பொருட்கள் என்பனவற்றை பெற முடியாமையே முடங்களுக்கு காரணம். ஈரானின் விமானங்கள் மேற்படி பொருட்களையே எடுத்து செல்கின்றன என்று கருதப்படுகிறது.
.
அத்துடன் அமெரிக்காவின் கட்டுப்பாடில் உள்ள சர்வதேச வங்கிகள் மூலம் ஈரானின் பொருட்களுக்கான பணத்தை செலுத்தாது, வேனேசுவேலா தங்கத்தை வழங்குகிறது என்றும் கருதப்படுகிறது. இவ்வகை பண்ட மாற்று மூலம் அமெரிக்காவின் கட்டுப்பாடில் உள்ள சர்வதேச வங்கிகளிடம் இருந்து இருந்து இரண்டு நாடுகளும் தம்மை விடுதலை செய்துள்ளன.
.
இரண்டு நாடுகள் மீதும் ஏற்கனவே அமெரிக்கா பலத்த தடைகளை விதித்து உள்ள நிலையில் மேலும் தண்டனைகளை அமெரிக்கா வழங்க இடமில்லை, யுத்தத்துக்கு செல்வதை தவிர.
.
அமெரிக்காவும், பல மேற்கு நாடுகளும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வேனேசுவேலாவின் சனாதிபதி Maduro வை நிராகரித்து, அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் Guaido வை சனாதிபதியாக அறிவித்து உள்ளனர். Maduro ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா பல முயற்சிகளை எடுத்துக்கொண்டாலும், ரஷ்யா, சீனா, கியூபா ஆகிய நாடுகளின் உதவிகளுடன் Maduro ஆட்சி நீடித்து வருகிறது.
.