சனிக்கிழமை சவுதி தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அத்துடன் பரல் ஒன்றுக்கான விலையையும் குறைத்தால் இன்று திங்கள் உலக பங்குச்சந்தைகள் பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகின. அமெரிக்காவின் DOW Jones Industrial Average இன்று 2,013 புள்ளிகளால் (7.8%) வீழ்ந்துள்ளது. DOW வின் வரலாற்றிலேயே இதுவே நாள் ஒன்றுக்கான அதிக வீழ்ச்சி ஆகும்.
.
அத்துடன் S&P 500 பங்குசந்தை சுட்டி 7.6% ஆல் வீழ்ந்துள்ளது. NASDAQ 7.3% ஆல் வீழ்ந்துள்ளது. கொரோனா வைரஸால் வீழ்ந்துள்ள பங்கு சந்தைகள் எண்ணெய் யுத்தத்தால் மீண்டும் வீழ்ந்துள்ளன.
.
நியூ யார்க் நேரப்படி திங்கள் காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகிய அமெரிக்க பங்கு சந்தைகள் சில நிமிடங்களில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியால் நிறுத்தப்பட்டு, 15 நிமிடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனாலும் வீழ்ச்சி பிற்பகல் 4:00 மணிவரை தொடர்ந்தன.
.
சவுதி, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மேற்படி எண்ணெய்வள யுத்தம் தொடர்ந்தால் பரல் ஒன்றின் விலை $20 ஆக குறையலாம் என்றும் கூறப்படுகிறது.
.
International benchmark Brent எண்ணெய் இன்று 29.07% பெறுமதியை இழந்து $32.11 ஆக குறைந்தது. அமெரிக்காவின் West Texas Intermediate எண்ணெய் 30.98% பெறுமதியை இழந்து $28.49 ஆக குறைந்தது.
.
JPMorgan, Citigroup, Bank of America ஆகிய அமெரிக்க வங்கிகளின் பங்குகளும் 10% க்கும் அதிகமாக வீழ்ந்து இருந்தன.
.
பதிலுக்கு பாதுகாப்பான சொத்தான தங்க விலை $1,700 ஐ அடைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பின் இதுவே தங்கத்தின் அதிக விலையாகும்.
.