தனது பரம எதிரியான ஈரானுடன் அமெரிக்கா இரகசிய பேச்சுவார்த்தைகளை செய்வதாக செய்திகள் கூறுகின்றன. பல ஆண்டு காலமாக அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் ஈரானுக்கு எதிராக நடைமுறை செய்த தடைகள் பலன் அளிக்காத நிலையிலேயே அமெரிக்கா இரகசிய பேச்சில் இறங்கி உள்ளது.
அத்துடன் பல எதிரிகளை ஒரே நேரம் கையாள முடியாத நிலையில் சில எதிரிகளுடன் முறுகல் நிலையை தணிக்கவும் விரும்புகிறது அமெரிக்கா. சீனாவுக்கு அடுத்து தற்போது ரஷ்யாவுக்கு பலமாக உள்ள ஈரானை ரஷ்யாவில் இருந்து பிரிக்கும் நோக்கத்தையும் அமெரிக்கா கொண்டிருக்கலாம்.
மத்திய கிழக்கு நாடான ஓமான் மூலமே அமெரிக்காவும், ஈரானும் தற்போது தொடர்பு கொள்கின்றன.
பேச்சுக்கள் நலமாக அமையின் அமெரிக்காவும், ஈரானும் ஒரு பகிரங்கம் செய்யப்படாத, மேசைக்கு கீழான இணக்கம் ஒன்றை ஏற்படுத்தலாம். அது 2024ம் ஆண்டில் மீண்டும் போட்டியிடவுள்ள பைடெனுக்கும் வசதியாகவும் அமையும்.
ஈரானுடன் நல்லுறவை வளர்க்கும் நோக்கில் அமெரிக்கா $2.7 பில்லியன் பணத்தை ஈராக் வங்கி ஒன்றில் இருந்து ஈரானுக்கு நகர்த்த இணங்கி உள்ளது.
சீனாவின் தயவுடன் சியா ஈரானும், சுனி சவுதியும் மீண்டும் நட்பு நாடுகள் ஆவதால் அமெரிக்காவின் ஆளுமை மத்திய கிழக்கில் குறைந்து உள்ளது.