இஸ்ரேலில் வெளியாகும் Haaretz என்ற பத்திரிகைக்கு பிரதமர் நெட்டன்யாஹுவின் அரசு தடை விதித்துள்ளது. இடதுசாரி பத்திரிகையான Haaretz வெளியிடும் செய்திகளால் விசனம் கொண்டதாலேயே வலதுசாரி பிரதமர் அந்த பத்திரிகை மீது தடையை விதித்துள்ளார்.
1918ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Haaretz இஸ்ரேலின் மூத்த பத்திரிகையாகும். இது பொதுவாக இடதுசாரி கொள்கைகளை கொண்டது. இது இஸ்ரேல் பலஸ்தீனரை தொடர்ந்தும் ஆக்கிரமிப்பதை கண்டிப்பது. இது காசாவில் இஸ்ரேல் படைகள் செய்யும் கொடுமைகளை பகிரங்கம் செய்து வந்துள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் 31ம் திகதி Haarezt பத்திரிகையை வெளியிடுபவரான Amos Schocken லண்டனில் செய்த உரை ஒன்றில் நெட்டன்யாஹு அரசு பலஸ்தீனர் இடங்களில் apartheid அரசு போல் இயங்குகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். அதனால் ஆவேசம் கொண்டார் பிரதமர் நெட்டன்யாஹு.
மேற்படி தடை இஸ்ரேல் அரசு Haaretz பத்திரிகைக்கு விளம்பரங்களை வழங்குவது, செய்திகள் மற்றும் பேட்டிகளை வழங்குவது போன்ற செயற்பாடுகளை தடை செய்கிறது. ஆனாலும் Haaretz பத்திரிகை தொடர்ந்தும் வெளிவரும்.
இந்த தடையை கண்டிக்கும் Haaretz பத்திரிகை பிரதமர் நெட்டன்யாஹுவை ரஷ்யாவின் பூட்டின், துருக்கியின் Erdogan, ஹங்கேரியின் Orban ஆகியோருடன் ஒப்பிட்டும், நெட்டன்யாஹு இஸ்ரேலில் சனநாயகத்தை அழிப்பதாகவும் சாடியுள்ளது.