லெபனான் ஆயுத குழுவான ஹெஸ்புல்லாவுக்கும், இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே இன்று செவ்வாய் 60 தின யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. யுத்த நிறுத்தம் லெபனான் நேரப்படி புதன் காலை 4:00 மணிக்கு ஆரம்பமாகும்.
இஸ்ரேல் அமைச்சரவையும் இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இஸ்ரேலின் கடும்போக்கு வலதுசாரி அரசியல்வாதிகள் இந்த யுத்த நிறுத்தத்தை சரண் அடைவதற்கு சமம் என்று கூறியுள்ளனர்.
யுத்த நிறுத்த காலத்தில் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஐ.நா. படைகளும், லெபனான் படைகளும் நிலைகொள்ளும். ஆனாலும் மேலதிக யுத்த நிறுத்த விபரங்கள் இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை.
இம்முறை இஸ்ரேல்-ஹெஸ்புல்லா யுத்தத்துக்கு லெபனான் தரப்பில் 3,768 பேர் பலியாகியும், 15,699 பேர் காயமடைந்தும் உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 45 பொதுமக்களும், 73 இஸ்ரேல் இராணுவத்தினரும் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ், இஸ்ரேல்-ஹெஸ்புல்லா யுத்தங்களில் தன்னால் எதையும் செய்ய முடியவில்லை பைடென் விசனம் கொண்டிருந்தார். கமலா ஹாரிஸ் தோல்வி அடையவும் இந்த யுத்தங்கள் காரணமாக இருந்தன. அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற முன் இந்த யுத்த நிறுத்தம் ஒரு சிறிய சாதனையை வழங்கியுள்ளது.