இலங்கை விசாவின் முதலாம் நுழைவு காலத்தையும் குறைத்து VFS?

இலங்கை விசாவின் முதலாம் நுழைவு காலத்தையும் குறைத்து VFS?

இலங்கைக்கு விசா வழங்கும் அந்நிய நிறுவனமான VFS Global விசாவின் முதலாம் நுழைவு காலத்தையும் குறைத்து உள்ளதாக விசா பெற்ற பயணிகள் கூறுகின்றனர்.

இலங்கையின் பழைய ETA விசா வழங்கும் இணையம் முதல் நுழைவுக்கு 6 மாதங்கள் முன்னர் விசாவை பெற வழி செய்தது. அவ்வாறு செய்வது பயணிகள் தமது பயணத்தை திட்டமிட போதிய காலத்தை வழங்கியது.

உதாரணமாக ஜூன் மாதம் தனது முதலாம் நுழைவை செய்யவுள்ள பயணி ஜனவரி மாதத்திலேயே ETA மூலம் விசாவை பெற முடியும்.

ஆனால் VFS Global அந்த காலத்தை 3 மாதங்களாக குறைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரித்தானிய பெண் ஒருவர் இரண்டு உல்லாச பயணிகள் விசாவுக்கு VFS மூலம் விண்ணப்பித்து உள்ளார். அவர் தனது விண்ணப்பத்தில் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் திகதி இலங்கையுள் நுழைந்து அக்டோபர் 4ம் திகதி வெளியேற உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

VFS இணையம் அந்த பெண்ணிடம் பணத்தை பெற்று விசாவை வழங்கியுள்ளது. அனால் அவர் ஆகஸ்ட் 3ம் திகதிக்கு முன் நுழைய வேண்டும் என்று நிபந்தனையும் வழங்கி உள்ளது. வழங்கிய விசா விண்ணப்பத்துக்கு முரணானது.

ஒரு தரமான இனையம் மேற்படி பெண்ணுக்கு விசா வழங்க மறுத்து, திகதியை மாறும்படி கூறியிருக்க வேண்டும். AI நிரம்பிய இந்த காலத்தில் அவ்வாறு செய்வது கடினம் அல்ல.

மேற்படி பெண் VFS இன் உதவியை நாட, VFS அவரை இலங்கை அரச அதிகாரிகளிடம் முறையிட கேட்டுள்ளது. அவர் இதுவரை தகுந்த பதில் எதையும் பெறவில்லை.

அந்த பெண் ஆகஸ்ட் 24ம் திகதிக்கு முன் இலங்கையுள் நுழையவில்லை என்றால் அவரின் விசா, அதற்கான பணம் விரையம் ஆகும்.