தற்போது வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமான சூறாவளி மோக்கா மேற்கே இலங்கை நோக்கி வராது வடகிழக்கே பங்களாதேசம், பர்மா நோக்கி செல்லலாம் என்று வானிலை அவதான நிலையங்கள் கணிக்கின்றன.
நாளை 10ம் திகதி சூறாவளியாக உக்கிரம் அடையும் மோக்கா 12ம் திகதியளவில் பங்களாதேச, பர்மா கரையில் தரையை அடையும் என்று கூறுகிறது இந்திய வானிலை அவதான நிலையம்.
கப்பல் மற்றும் மீன்பிடி வள்ளங்களுக்கும் இப்பகுதியை தவிர்க்க கூறப்பட்டுள்ளது.
தற்போது காற்று திசைமாறும் காலம் ஆதலால் மோக்கா எதிர்பாராத திசையிலும் செல்லலாம்.
இந்த சூறாவளிக்கு யெமென் (Yemen) என்ற மத்தியகிழக்கு நாடு மோக்கா (Mocha) என்று பெயர் இட்டுள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த Mocha என்ற யெமெனின் செங்கடல் துறைமுகத்தில் இருந்தே கோப்பி உலகுக்கு பரவியதாக யெமென் கூறுகிறது. எதியோபியரும் கோப்பியின் ஆரம்பம் எதியோப்பியா என்று கூறுகின்றனர்.