முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென கைது செய்யப்பட்ட பின் பாகிஸ்தானின் பல பாகங்களில் வன்முறைகள் தோன்றியுள்ளன. இம்ரான் ஆதரவாளர் வீதிகளை மறித்து, இராணுவ அதிகாரிகளின் வீடுகளை எரித்து போராடுகின்றனர்.
பாகிஸ்தானின் சுதந்திர வரலாற்றில் இதுவரை 7 பிரதமர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திரத்தின் பின் சுமார் அரைப்பங்கு காலம் பாகிஸ்தான் இராணுவ ஆட்சியில் இருந்தது.
ஒருதொகை வழக்குகளுக்காக நீதிமன்றம் சென்ற இம்ரானை வேறு சில குற்றங்களை சாட்டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இம்ரானை 8 தினங்களுக்கு தடுப்பில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
Peshawar நகரில் உள்ள அரச வானொலி நிலையம், அரச அலுவலகங்கள் ஆகியவற்றை ஆயிர கணக்கான இம்ரான் ஆதரவாளர் முற்றுகை இட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் 157 போலீசார் காயமடைந்து உள்ளனர். அத்துடன் 945 இம்ரான் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Lahore நகரில் ஜெனரல் ஒருவரின் வீடும், Rawalpindi நகரில் இராணுவ தலைமையகம் ஒன்றும் தாக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு கூட்டணி கட்சி ஒன்று தனது ஆதரவை பின்வாங்க, இம்ரான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் இம்ரான் மீது 80 க்கும் மேற்பட்ட வழக்குகள் அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 290 பாகிஸ்தான் ரூபாயாக அந்நாட்டு பணம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கையை போல் பாகிஸ்தானும் IMF உதவியை நாடியுள்ளது.