இந்தியாவின் அனுமதி பெறாது இந்திய கடலுக்குள் அமெரிக்கா தனது யுத்த கப்பலை செலுத்தியதால் விசனம் கொண்ட இந்தியா அமெரிக்காவிடம் தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. ஆனால் அமெரிக்கா குறித்த பகுதி கடல் மீதான இந்தியாவின் உரிமையை மறுத்துள்ளது.
கடந்த புதன்கிழமை USS John Paul Jones என்ற அமெரிக்காவின் 7ம் படைக்குரிய (7th Fleet) யுத்த கப்பல் (guided-missile destroyer) இலச்சத்தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தூரத்தில் சென்றுள்ளது.
1982ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட United Nations Convention on the Law of the Sea (UNCLOS) சட்டப்படி இந்திய கரையில் இருந்து 200 கடல் மைல் தூரம் இந்தியாவுக்குரிய Exclusive Economic Zone. அதனால் அமெரிக்க கப்பல் இந்தியாவின் அனுமதி பெற்றுக்கொண்ட பின்னரே அவ்வழியே சென்றிருக்க வேண்டும்.
ஆனால் அமெரிக்கா மேற்படி ஐ. நா. உடன்படிக்கையில் ஒப்பமிடவில்லை. அதனால் 130 கடல் மைல் தூர கடல் சர்வதேச கடல் என்கிறது அமெரிக்கா. சர்வதேச கடலில் பயணிக்க இந்தியாவின் அனுமதி தேவையில்லை என்கிறது.
அதேவேளை அஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவும், இந்தியாவும் இணைத்து தென் சீன கடலில் (South China Sea) சர்வதேச கடல் உரிமையை நிலைநாட்ட செல்கின்றன. அரபுக்கடலில் கடல் உரிமைக்கு தம்முள் ஒரு பொது விதிமுறையை கொள்ள முடியாத இவர்கள் தென் சீன கடலில் எந்த விதிமுறையை கடைப்பிடித்து செயற்படுகிறார்கள்?