தற்போது இந்தியா சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் ஜான்சன் (Boris Johnson) இந்திய பிரதமர் மோதியுடன் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளார். ஆனாலும் இந்த உடன்படிக்கை விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த உடன்படிக்கை இந்தியா இலகுவில் பிரித்தானிய ஆயுதங்களை கொள்வனவு செய்ய உதவும் என்று கூறப்படுகிறது.
அதேவேளை பிரித்தானியா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவை அதிகரிக்கவும் விரும்புகிறது. இந்தியா விதிக்கும் அதிக அளவிலான இறக்குமதி வரிகள் காரணமாக தம்மால் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார் ஜான்சன்.
உதாரணமாக பிரித்தானிய விஸ்கிக்கு இந்தியா 100% இறக்குமதி வரி அரவிடுகிறது. அதனால் விலை இரட்டிப்பாகிறது என்று குறை கூறுகிறது பிரித்தானியா. இந்தியா இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கும் அதிக வரி அறவிடுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவும், பிரித்தானியாவும் புதிய வர்த்தக உண்டபடிக்கை ஒன்றையும் செய்ய முனைகின்றன.
கடந்த ஆண்டு இந்தியா சுமார் $10.8 பில்லியன் பெறுமதியான பொருட்களை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் சுமார் $6 பில்லியன் பெறுமதியான பொருட்களை மட்டுமே பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து பிரிக்கவும் பிரித்தானியா உட்பட மேற்கு நாடுகள் முனைகின்றன.