அமெரிக்காவின் வாகன உற்பத்தி நிறுவனமான Ford Motor Company தனது இந்திய வர்த்தக நடவடிக்கைகளை கைவிடுவதாக கூறியுள்ளது. இந்தியாவில் தம்மால் இலாபகரமாக செயற்பட முடியாது என்று Ford கூறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமது இந்திய வர்த்தக நடவடிக்கை $2 பில்லியன் இழப்பை கொண்டுள்ளது என்றும் Ford கூறியுள்ளது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் Ford இந்தியாவில் இயங்க ஆரம்பித்து இருந்தது. ஆனால் அது இந்தியாவில் பலமாக காலூன்ற முடியவில்லை. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்களில் 2% வாகனங்கள் மட்டுமே Ford வாகனங்கள்.
பதிலுக்கு Ford தனது வர்த்தகத்தை சீனாவில் பலப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.
முன்னைய கணிப்புகளின்படி 2020ம் ஆண்டு அளவில் இந்தியா, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் அடுத்து, மூன்றாவது பெரிய வாகன சந்தையாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதன்படி இந்தியாவில் 5 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால் சுமார் 3 மில்லியன் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்தியாவில் ஆசிய வாகன நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் Maruti Suzuki, Hyundai போன்ற வாகனங்கள் பிரபலமானவை. சஇவை இரண்டும் 60% சந்தையை கொண்டுள்ளன. அமெரிக்காவின் வாகன தயாரிப்பு நிறுவனமான General Motors (GM), Motorcycle தயாரிப்பு நிறுவனமான Harley-Davidson ஆகியன ஏற்கனவே இந்தியாவில் இருந்து வெளியேறி உள்ளன.
Ford தனது குயாராத், மற்றும் சென்னை உற்பத்தி நிலையங்களை விரைவில் மூடும். அதனால் சுமார் 4,000 ஊழியர் தமது தொழிலை இழப்பர்.
1926ம் ஆண்டு முதலில் இந்தியா சென்றிருந்த Ford 1950ம் ஆண்டுகளில் முன்னரும் இந்தியாவை விட்டு வெளியேறி இருந்தது.