தற்போது ரம்பின் வலது கையாக உள்ள இலான் மஸ்கின் (Elon Musk) நிறுவனமாக Starlink இந்தியாவுக்கு வழங்கும் செய்மதி மூல இணைய சேவையை தான் நிறுத்தி உள்ளதாக கூறியுள்ளது. இந்திய இராணுவம் இரண்டு Starlink இணைய கருவிகளை (satellite receiver) கைப்பற்றியதே காரணம்.
இந்தியாவில் starlink சட்டப்படி செய்மதி மூலமான இணைய சேவையை வழங்கவில்லை. இந்தியா இதுவரை அந்த உரிமையை வழங்கவில்லை. அதனால் இந்தியாவில் சட்டப்படி எவரும் Starlink சேவையை பெறவில்லை.
ஆனாலும் இந்திய இராணுவம் 2 Starlink கருவிகளை கைப்பற்றி உள்ளது. அதில் ஒன்று டிசம்பர் 13ம் திகதி மணிப்பூர் மாநிலத்தில் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்திய எதிர்ப்பு ஆயுத குழு ஒன்று இதை பயன்படுத்தியதாக இந்திய இராணுவம் கூறுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் அண்மை காலங்களில் பெரும் கலவரம் இடம்பெறுகிறது.
மற்றைய கருவி போதை கடத்தும் குழு ஒன்றால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறது இந்தியா.
இந்த இரண்டு கைப்பற்றலும் Starlink சட்டவிரோதமாக செய்மதி மூலம் சேவையை இந்தியாவில் வழங்கியதை காட்டுகிறது. இந்த இரண்டு கருவிகளும் பர்மா ஊடாக கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், பர்மாவிலும் Starlink சேவை சட்டப்படி வழங்கப்படவில்லை.
இந்த இரண்டு கருவிகளின் உரிமையாளர் விபரங்களை Starlink இந்தியா Starlink நிறுவனத்திடம் கேட்டுள்ளது.