இந்திய பாடசாலைகளில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்போர் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது என்று அறிய வைக்கிறது 2019/2020 கல்வி ஆண்டுக்கான UDISE (Unified District Information System for Education) என்ற அமைப்பின் தரவுகள்.
தேசிய அளவில் ஹிந்தி மூலம் கற்போர் அளவு 42% ஆக இருந்தாலும், ஆங்கிலம் மூலம் கற்போர் அளவு 25% க்கும் அதிகமாக அதிகரித்து உள்ளது.
பெரும்பாலான தெற்கு மாநிலங்களிலும், புஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்களிலும் ஆங்கிலம் மூலம் கற்போர் அளவு மாநில மொழி மூலம் கற்போர் அளவிலும் அதிகமாக உள்ளது.
டெல்லியில் தற்போது சுமார் 60% மாணவர் ஆங்கிலம் மூலமே கல்வி கற்கின்றனர். அத்தொகை 2014-2015 கல்வியாண்டு அளவில் இருந்து 7.6% ஆல் அதிகரித்து உள்ளது.
புஞ்சாப்பில் 2014-2015 கல்வியாண்டில் 37.6% ஆக இருந்த ஆங்கிலம் மூலம் கற்போர் அளவு தற்போது 51% ஆக அதிகரித்து உள்ளது.
2014-2015 கல்வியாண்டில் 27.6% மாணவரே ஹரியானாவில் ஆங்கிலம் மூலம் கற்று இருந்தனர். ஆனால் 2019-2020 கல்வியாண்டில் அத்தொகை 50.6% ஆக அதிகரித்து உள்ளது.
2014-2015 கல்வியாண்டில் 52.1% மாணவரே தெலுங்கானாவில் ஆங்கிலம் மூலம் கற்று இருந்தனர். ஆனால் 2019-2020 கல்வியாண்டில் அத்தொகை 78.3% ஆக அதிகரித்து உள்ளது.
2014-2015 கல்வியாண்டில் 42.6% மாணவரே தமிழ்நாட்டில் ஆங்கிலம் மூலம் கற்று இருந்தனர். ஆனால் 2019-2020 கல்வியாண்டில் அத்தொகை 57.6% ஆக அதிகரித்து உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தற்போதும் 53.5% மாணவர் மாநில மொழி மூலம் கல்வி கற்றாலும், அங்கும் ஆங்கிலம் மூலம் கற்போர் அளவு சுமார் 20% ஆல் அதிகரித்து உள்ளது.
ஆனால் பொருளாதாரம் மந்தமாக உள்ள மேற்கு வங்கம் (5.3%), ஒடிசா (9.5%), பீகார் (10%) ஆகிய மாநிலங்களில் ஆங்கிலம் மூலம் கற்போர் அளவு ஒப்பிட்ட அளவில் குறைவாகவே உள்ளன.