Toronto-St. Paul’s என்ற கனேடிய தொகுதியில் முன்னைய பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வு பெற்றதால் இன்று திங்கள் இடைத்தேர்தல் இடம்பெற்றது. Liberal கட்சியின் கோட்டையாக இருந்த இந்த தொகுதியில் இம்முறை Liberal வெல்ல முடியவில்லை.
மொத்தம் 192 வாக்கெடுப்பு நிலையங்களில் 188 நிலையங்களின் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையிலும் தேர்தலின் வெற்றியாளரை உறுதி செய்ய முடியாது இருந்தது. அப்போது Liberal (Leslie Church) கட்சி 373 வாக்குகளால் மட்டும் முன் நின்றது. பின்னர் Conservative (Don Stewart) கட்சி 491 வாக்குகளால் முன் நின்றது.
இறுதியில் Conservative கட்சியின் Don Stewart 15,555 (42.1%) வாக்குகள் பெற்று வென்றார். Liberal பெற்றது 14,965 (40.5%) வாக்குகள் மட்டுமே.
இந்த தேர்தலில் Liberal வெற்றி அடைவது ரூடோவுக்கு மிக அவசியம் என்பதால் ரூடோவும், குறைந்தது 13 அமைச்சர்களும் இந்த இடைத்தேர்தல் பரப்புரைகளில் பங்கெடுத்து Liberal கட்சிக்கு வாக்கு கேட்டிருந்தனர்.
1993ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் Liberal கட்சியே ஒவ்வொரு தடவையும் வெற்றி அடைந்திருந்தது. 2021ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் Liberal கட்சி இந்த தொகுதியில் 49.22% வாக்குகள் பெற்று வெற்றி அடைந்திருந்தது. இரண்டாம் இடத்தை அடைந்திருந்த Conservative கட்சிக்கு 25.3% வாக்குகளே கிடைத்திருந்தன.
2011ம் ஆண்டு பொது தேர்தலில் Liberal படுதோல்வி அடைந்து 3ம் கட்சியான நிலையிலும் இத்தொகுதியில் Liberal வெற்றி அடைந்திருந்தது. ஆனால் இம்முறை தோல்வி அடைந்துள்ளது.
இந்த தோல்விக்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவே காரணம் என்று கருதப்படுகிறது. அதனால் Liberal கட்சி ரூடோவை பின்தள்ளி வேறு ஒருவரை Liberal கட்சி தலைமைக்கு தெரிவு செய்ய முனையலாம்.
இம்முறை Longest Ballot Committee என்ற குழு 75 போட்டியாளர்களை (மொத்தம் 84 போட்டியாளர்) நிறுத்தி இருந்தது. ஆனால் இவர்கள் வாக்கு கேட்டு பரப்புரைகளில் ஈடுபட்டிருக்கவில்லை. அதனால் வாக்களிக்கும் காகிதம் சுமார் 3 மீட்டர் நீளமானதாக இருந்தது. இவர்கள் proportional representation நடைமுறை செய்ய போராடுபவர்கள்.