கனடாவின் பொய் கல்லூரிகள் (colleges), பல்கலைக்கழகங்கள் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு கடத்தப்படுவதற்கு துணை போகின்றன என்று இந்தியா கனடா மீது குற்றம் சுமத்தியுள்ளது. கனடாவின் அக்கறை இன்றிய போக்கே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
கனடாவில் மாணவ விசா எடுக்கும் பெருமளவு இந்திய மாணவர்களின் நோக்கம் கனடாவில் படிப்பது அல்ல என்றும், அவர்கள் உடனே களவாக அமெரிக்கா செல்கின்றனர் என்றும் இந்தியா தனது அறிக்கையில் கூறியுள்ளது.
2022ம் ஆண்டு தாய், தந்தை, அவர்களின் 2 சிறுவர்கள் உட்பட்ட Patel குடும்பம் கனடிய Manitoba மாகாண – அமெரிக்க Minnesota மாநில எல்லையில் குளிரில் உறைந்து மரணமான சம்பவத்தின் வழக்கு ஆரம்பித்த வேளையிலேயே இந்தியா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. Harshkumar Patel, Steve Shand, Bhavesh Patel ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடர்கிறது.
அன்றைய தினம் மரணித்த நால்வரும் ஒன்றாக கடத்தப்பட்ட 11 பேர் கொண்ட கூட்டத்தில் அங்கம். ஏனையோர் உயிருடன் எல்லையை கடந்தாலும் பின்னர் அவர்கள் அமெரிக்க எல்லை அதிகாரிகளிடம் அகப்பட்டு உள்ளனர்.
கனடிய-அமெரிக்க எல்லையை சட்டவிரோதமாக கடக்க மட்டும் $93,000 முதல் $102,000 அறவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் விசாரணையின்படி இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனம் சுமார் 25,000 இந்திய மாணவர்களை வழங்கியுள்ளது. இன்னோர் நிறுவனம் 10,000 இந்திய மாணவர்களை வழங்கியுள்ளது.
கனடாவில் உள்ள 112 கல்லூரிகள் ஒரு இந்திய நிறுவனத்துடனும், மேலும் 150 கனடிய கல்லூரிகள் இன்னோர் இந்திய நிறுவனத்துடனும் இணைந்தே மேற்படி ஆள் கடத்தலை செய்துள்ளன என்கிறது இந்திய அறிக்கை.
இந்தியா கண்டறிந்த உண்மைகளை தமக்கு தெரியப்படுத்துமாறு கனடா இந்தியாவை கேட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு விசா மாணவர் கல்லூரிக்கு செல்வதை நிறுத்தினால் அந்த கல்லூரி உடனடியாக அரசுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும். உடனே அமெரிக்கா அரசு அவரை தேடும். அனால் கனடாவில் அவ்வாறு கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை.