Joshua Mast என்ற அமெரிக்க Marine Corps படையினன்/வழக்கறிஞர் அவரின் மனைவியுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் பெண் குழந்தை ஒன்றை தனதாக்கினார் என்று குழந்தையின் உறவினரால் வழக்கு ஒன்று அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் நீதி திணைக்களங்களுள் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க படைகள் தாக்கியதில் ஆப்கானித்தான் குடும்பம் ஒன்று பலியாகி இருந்தது. தாய், தந்தை, 5 சகோதரங்கள் பலியாக ஒரு பெண் குழந்தை மட்டும் காயங்களுடன் தப்பியது. இந்த பெண் குழந்தைக்கு அமெரிக்க படைகள் வைத்தியம் வழங்கினர். குழந்தை நலமான பின் குழந்தையின் உறவினரிடம் (cousin) ஒப்படைக்கப்பட்டது.
புதிதாக திருமணம் செய்த உறவினரும், அவரின் மனைவியும் தாய், தந்தை, சகோதரங்கள் அற்ற இந்த குழந்தையை தமது குழந்தையாக தத்து எடுத்தனர். மேலதிக மருத்துவத்துக்காக குழந்தையும், வளர்ப்பு குடும்பமும் அமெரிக்காவுக்கு 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுத்துவரப்பட்டனர்.
அமெரிக்க Washington DC விமான நிலையத்தை அடைந்தபின் Mast குழந்தைக்கான கடவுச்சீட்டை காண்பித்தார். அதில் குழந்தையின் குடும்ப பெயர் Mast ஆக இருந்துள்ளது. குழந்தை ஆப்கானித்தானில் வாழ்ந்த காலத்திலேயே Mast தனது இராணுவ, அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி குழந்தையை தனது ஆக்க உரிய வழிகளை செய்து உரிய ஆவணங்களும் தயாரித்து இருந்தமை தெரியவந்தது.
குழந்தை அமெரிக்காவுக்கு வந்து 5 தினங்கள் இருக்கையில், Mast உரிமை ஆவணங்களை காட்டி குழந்தையை அபகரித்து சென்றுள்ளார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் திகதி குழந்தையின் தந்தையை பிடிக்க அல்லது கொலை செய்ய அமெரிக்க படையினர் ஹெலிகளில் சென்று சுற்றிவளைத்த வேளையில் தந்தை குண்டு ஒன்றை வெடிக்க வைத்துள்ளார். அந்த குண்டுக்கு தந்தையும், 5 குழந்தைகளும் பலியாகினர். தாயை அமெரிக்க படைகள் சுட்டது. இதுவே அமெரிக்க தரப்பு கூற்று.
ஆனால் ஆப்கான் குடும்பம் சார்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் பலியான தந்தைக்கும் பயங்கவாதிகளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர்கள் கமத்தொழில் செய்பவர்கள் என்றும் கூறியுள்ளனர்.
தாக்குதலில் பின் மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு வயது 2 மாதங்கள் மட்டுமே. செஞ்சிலுவை சங்கம் உடனே குழந்தையின் உறவினரை தேட ஆரம்பித்தது. அனால் Mast உடனே Mike Pence என்ற அக்கால உதிவி சனாதிபதிக்கு கடிதம் எழுதி குழந்தையை கைக்கொள்ள முனைந்துள்ளார்.
அமெரிக்க தத்தெடுப்பு சட்டங்கள் ஆப்கானிஸ்த்தானில் இல்லை. ஆப்கானிஸ்த்தானில் kafala என்ற இஸ்லாமிய தத்தெடுப்பு சட்டமே உள்ளது. அதன்படி குழந்தையின் பெயர், இரத்த உறவுகள் பாதிக்கப்படாமலேயே தத்து எடுக்கலாம்.
Mast அமெரிக்காவின் Virginia நீதிமன்றில் குழந்தை ஒரு நாடற்ற, யுத்த இடத்தில் எடுக்கப்பட்டது (stateless minor recovered off the battlefield) என்று கூற, நீதிபதி Mast தத்து எடுக்க உரிமை வழங்கியுள்ளார். இங்கு stateless என்பதுவும், battlefirled என்பதுவும் தவறு. சுற்றிவளைப்பின் பின் எடுக்கப்பட்ட குழந்தை ஆப்கான் குழந்தை.