இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான அதானி நிறுவனம் மீது அமெரிக்கா இலஞ்ச குற்றச்சாட்டை முன்வைத்த வேளையில் அதானி நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்து இருந்தது. தற்போது இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் தகவல்கள் கசிந்துள்ளன.
2021ம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி Solar Energy Corporation of India (SECI) என்ற மத்திய அரச நிறுவனம் ஆந்திரா மாநிலத்தில் சூரிய சக்தி மூலமான மின்னை வழங்க விருப்பம் தெரிவித்து இருந்தது. SECI வழங்க இருந்தது அதானியின் மின் உற்பத்தியையே.
ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஆந்திரா அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்த மாநிலத்துக்கு மேலதிக மின் சக்தி உற்பத்தி அதிகரிப்பு தேவை இல்லை என்று கணித்திருந்தது.
ஆனால் SECI விருப்பம் வெளிவந்த மறுத்தினமே ஆந்திராவின் 26 உறுப்பினர்களை கொண்ட முதலமைச்சர் Jagan Reddy அரசு ஆரம்ப நிலை ஆதரவை (preliminary approval) வழங்கியுள்ளது. மாநில அதிகாரிகளின்மேற்படி கணிப்பை மீறியே மாநில அரசியல்வாதிகள் SECI மூலமான அதானி திட்டத்தை ஆதரித்து உள்ளனர்.
இந்த திட்டத்துக்கு நவம்பர் மாதம் 11ம் திகதி மாநிலம் மத்திய அரசின் அனுமதி பெற்று, டிசம்பர் மாதம் 1ம் திகதி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டும்இருந்தது. மொத்தம் 57 தினங்களில் இந்த பெரிய ஒப்பந்தம் நிறைவேறி உள்ளது.
இந்த 25 ஆண்டுகால, 7,000 மெகாவாட் ஒப்பந்தத்தின் ஆண்டு ஒன்றுக்கான பெறுமதி $490 மில்லியன். அதில் 97% அதானி நிறுவனத்திற்கு செல்லும்.
அமெரிக்காவின் வழக்கு ஆந்திரா அரசியல்வாதிகள் மேற்படி திட்டத்துக்கு $228 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக கூறுகிறது.
புதிய ஆந்திரா அரசு தற்போது இந்த ஒப்பந்தத்தை முறிக்க முனைகிறது.